பாலாவோடை, காரைநகரைச் சேர்ந்தவரும் சம்பந்தர்கண்டியில் வசித்து வந்தவரும் ஓய்வுநிலை புகையிரதநிலைய அதிபருமாகிய அமரர் சோமசுந்தரம் அவர்களதும் அன்னாரது துணைவியார் அமரர் பரமேஸ்வரி (முத்து) அவர்களதும் ஞாபகாரத்தமாக காரை.இந்து விளையாட்டு மைதானத்தின் எல்லையின் ஒரு பகுதியில் 350 அடி நீளமான மதில் 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அமரர் சோமசுந்தரமும் அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரமும் காரை.இந்தவின் பழைய மாணவர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரும் கனடாவில் வசித்து அமரத்துவம் அடைந்திருந்தனர்.
காரை.இந்துவில் கல்வி பயின்று உயர் பதவிகளில் இருக்கும் கனடாவிலும், லண்டனிலும் வதியும் இவர்களது பிள்ளைகளின் முழுமையான அனுசரணையிலும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடனும் இம்மதில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைதானத்தின் தெற்குப்புற எல்லையில் 250 அடி நீளமான மதில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளது. மேற்கு எல்லையில் 100 அடி நீளமான மதில் அமைக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்விளையாட்டு மைதானமானது பாடசாலையினால் மட்டுமல்லாது பிரிவுச்செயலக விளையாட்டுப் போட்டியினை நடாத்தவும் காரைநகரிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் போட்டி நிகழ்வுகளை நடாத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற முக்கியமான ஒரு சிறந்த அமைப்புடைய விசாலமான அழகிய மைதானமாக உள்ளதுடன் மதில் வேலைகள் நிறைவுற்றதும் மேலும் அழகாகத் தோற்றமளிக்கும்.
கிழக்கு எல்லையிலும் தெற்கு எல்லையின் ஒரு பகுதியிலும் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள மதிலுக்கான அனுசரணையினை பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறிப்பிட்ட மதிலினை அமைக்க உதவிய அமரர் சோமசுந்தரம், அமரர் பரமேஸ்வரி தம்பதியினரின் பிள்ளைகளுக்கும் இவ்வுதவியை பெறுவதற்கும் அமைக்கவும் ஒத்துழைத்து வருகின்ற பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நிறைவுசெய்யப்பட்டுள்ள தெற்குப்புற எல்லையிலுள்ள மதிலின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “அமரர் சோமசுந்தரம் அமரர் பரமேஸ்வரி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக அவர்களது பிள்ளைகளின் உதவியுடன் விளையாட்டு மைதானத்தின் எல்லை மதில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.”