காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையானது ஆறு ஆண்டுகள் என்கின்ற குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்றால் அதற்கு விசுவாசம் மிக்க பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் அனுசரணையாளர்களும் வழங்கிவருகின்ற உதவிகள், ஒத்துழைப்புக்கள் என்பவற்றுடன் தன்னலம் கருதாத அர்ப்பணிப்பு மிக்க பழைய மாணவர்கள் பலரது தளராத உழைப்புமே ஆதாரமாகும். அந்த வகையில் இன்றுவரை தொடர்ந்து தமது உழைப்பினை தளராது வழங்கி வருபவர்கள் வரிசையில், சங்கத்தின் தற்போதய கணக்காய்வாளரும், முன்னாள் போசகரும், முன்னாள் தலைவரும், சங்கம் தோற்றம் பெறுவதற்கு இடைக்கால நிர்வாகசபையில் இடம்பெற்று முக்கிய பங்கினை வகித்தவரும் ஆகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பாராட்டிப் போற்றும்படியான முக்கிய இடத்தைப் பெற்ற ஒருவராக விளங்குகின்றார். திரு. வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றைய தினம் அகவை எண்பதை அடைந்து முத்து விழா காண்பதையிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரை வாழ்த்தி மகிழ்கின்றது.
சமூகசிந்தனையும் கல்விப் பின்புலமும் கொண்ட சிறந்த குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்த திரு வேலாயுதபிள்ளை அவர்கள், காரைநகர் இந்துக் கல்லூரியில் தமது இடைநிலைக் கல்வியை மேற்கொண்ட பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞராக முதன்முதலில் நியமனத்தைப் பெற்றுக்கொண்டவர். வேலையில் இவர் வெளிப்படுத்திவந்த திறமையும், கடமை உணர்வும், இயல்பாகவே இவருக்கிருந்த அறிவும், ஆற்றலும் அவற்றின் காரணமாக மேலதிகாரிகளிடத்தில் இவர் பெற்றுக்கொண்ட நன்மதிப்பும் பல படிநிலைகளிலும் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழிகோலியதுடன் பிரதி நில அளவையாளர் நாயகம்(Deputy Surveyor General) என்கின்ற உயர்வான பதவியில் அமர்ந்து கல்லூரி அன்னைக்கு பெருமை தேடித்தந்தவர். 42ஆண்டுகள் என்கின்ற நீண்ட சேவைக்காலத்தினை நிறைவுசெய்து இளைப்பாறிய பின்னர் தமது குடும்பத்துடன்; கனடாவில் குடியேறிய திரு. வேலாயுதபிள்ளை அவர்கள் கனடா-காரை கலாசார மன்றத்துடன் இணைந்து ஊர்ப்பணியில் ஈடுபடலானார். இச்சங்கத்தின் திட்டமிடல் போசகர் சபையிலும், நிர்வாக சபையிலும் இடம்பெற்றிருந்ததுடன் கணக்காய்வாளராகவும் நியமனம்பெற்று தமது பெறுமதிமிக்க சேவையை வழங்கியிருந்தவர். இவரது சேவையையும், சிறப்புக்களையும் கருத்திற்கொண்ட கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ‘காரை விழுதுகள்’ கலை விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தியிருந்தனர்.
காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உருவாக்கம் பெற்றபோது எதிர்கொண்ட சவால்களையும், தடைகளையும் தாண்டி பழைய மாணவர்களின் பேராதரவுடன் இலக்கினை அடைந்தமைக்கு திரு.வேலாயுதபிள்ளை அவர்களின் ஆளுமை மிக்க நிதானமான வழிகாட்டுதலும், மதிநுட்பம் மிக்க ஆலோசனைகளும் பேருதவியளித்திருந்தன என்பது இத்தருணத்தில் பதிவுசெய்யப்படவேண்டியதாகும். இன்றுவரைக்கும் தமது சீரிய ஆலோசனைகளுடன் கூடிய உழைப்பினை எமது சங்கத்திற்கு வழங்கி வருவதன் ஊடாக தனது வளமான வாழ்விற்கு வழிகாட்டிய கல்லூரி அன்னை மீது அவருக்கு இருந்து வருகின்ற ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி முன்னுதாரணமாக விளங்கிவருபவர்.
ஒன்ராறியோ மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா ஓய்வூதியர்கள் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியது மட்டுமல்லாது இன்றுவரைக்கும் அச்சங்கத்தின மூத்த தீவிர செயற்பாட்டு உறுப்பினராக இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வினை ஏற்படுத்த உதவி வருபவர் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து தமது குடும்பத்துடன் இன்புற்றிருப்பதுடன் சமூகத்திற்கான பணியைத் தொடர பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்தித்து உளமார வாழ்த்துகின்றது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்திற்கு உழைத்து அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்ற வேலாயுதபிள்ளை அவர்களுக்கு இன்று அகவை எண்பது!”