கலாநிதி ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை நிதியத்திலிருந்து காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாண்டுக்கான தியாகராசா புலமைப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நிதியத்தின் அறங்காவலர் சபைத் தலைவரும் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை அதிபருமாகிய திரு.கந்தையா நேத்திரானந்தன் தலைமையில் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில 28.05.2014 அன்று நடைபெற்றது.
கலாநிதி ஆ.தியாகராசாவின் புதல்வியும், மேற்படி நிதியத்தை தனது கணவர் அமரர் கலாநிதி.ச.சபாரத்தினம் அவர்களுடன் இணைந்து தொடக்கி வைத்து இந்நிதியத்திற்கான ஒதுக்கீட்டு நிதியை ஆண்டுதோறும் வழங்கி வரும் பெருங்கொடை வள்ளலுமாகிய கலாநிதி திருமதி.மங்கையற்கரசி சபாரத்தினம் அவர்கள் பிரித்தானியாவிலிருந்து இந்நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ‘தியாகராசா புலமைப் பரிசில்’களை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
மேற்படி அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபைச் செயலாளரும் முன்னாள் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கச் செயலாளரமாகிய திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம், பொருளாளரும் வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை அதிபருமாகிய செல்வி.விமலாதேவி விசுவநாதன் ஆகியோர் மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கமைத்திருந்தனர்.
‘கலாநிதி ஆ.தியாகராசா இசைப் புலமைப் பரிசு’ யாழ் பல்கலைக்கழக இராமநாதன் இசைக் கல்லூரிக்குத் தெரிவான இரு மாணவிகளுக்கு மாதாந்தம் ரூபா 4000/= வீதம் வழங்கப்பட்டது.
‘கலாநிதி ஆ.தியாகராசா புலமைப் பரிசு’ கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், யாழ்ற்றன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் க.பொ.த (உ-த) மாணவர்களுக்கு மாதாந்தாம் ரூபா 2000/= வீதமும், க.பொ.த(சா-த) மாணவர்களுக்கு மாதந்தாம் ரூபா 1000/= வீதமும் வழங்கப்பட்டது.
மேற்படி இரு புலமைப்பரிசிலுக்கும் விண்ணப்பித்த மாணவர்களின் முன்னைய பெறுபேறுகள், திறமை இவற்றின் அடிப்படையில் தியாகராசா அறிவியல் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால்; 59 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்படி புலமைப்பரிசுகள் இவ்வாண்டு வழங்கப்பட்டிருந்தன.
நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் உரையாற்றினர். கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றும்போது எமது கல்லூரியில் இதுவரை பல அதிபர்கள் சேவையாற்றியபோதும் வெள்ளி விழா அதிபரான கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் எல்லோராலும் போற்றப்பட்டு விழா எடுக்கப்படும் ஒரு அதிபராக வரலாற்றில் தடம் பதித்துள்ளார் என்று கூறனார். அவர் ஓர் அதிபராக தனது கல்லூரியின் வளர்ச்சியுடன் நின்றுவிடாது அதற்கப்பால் தனது கிராமத்தின் வளர்ச்சியினூடாக தனது சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டார் என்றும் குறிப்பிட்டார். அதிபர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் வழியில் பரந்த மனப்பான்மையுடனும் தூய உள்ளத்துடனும் நாம் சேவையாற்றுவோமாக என்று கூறினார்.
மேலும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர்களான திரு.யோகலிங்கம் கேதீஸ்வரன், திருமதி. பத்மலீலா அமுதசிங்கம் மற்றும் உயர்தர வகுப்ப மாணவன் செல்வன்.விநோதன் கனகலிங்கம் ஆகியோரும் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் சேவை பற்றி உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை நிதியத்திலிருந்து காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு தியாகராசா புலமைப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது”