காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 7வது ஆண்டுப் பொதுக் கூட்டம் இன்று(21-04-2019)ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. சங்கத்தின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முப்பத்தைந்து உறுப்பினர்கள் சமூகமளித்திருந்ததுடன் பலரும் பாடசாலையின் மேம்பாடு சார்ந்து மிகுந்த ஆர்வத்துடன தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டமை மேலும் சிறப்பானதாகும். அதேவேளையில் இக்கூட்டத்தில் அதிக அளவிலான பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கத்தின் போசகர் ‘சிவநெறிச்செல்வர்’ தி.விசுவலிங்கம் அவர்கள் தேவாரம் பாடியதைத் தொடர்ந்து இரு நிமிடங்கள அமரத்துவம் அடைந்த கல்லூரிச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது. திரு.குஞ்சிதபாதம் அவர்களின் தலைவர் முன்னுரையை அடுத்து செயலாளர் கனக சிவகுமாரன் அவர்களினால் முன்னைய ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செயலாளரினால் 2018ஆம் ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிக்கபட்டிருந்ததுடன் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னர் திருத்தங்களின்றி பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் ஜனவரி 2019 முதல் இன்று வரைக்குமான இடைக்கால வரவு-செலவு அறிக்கையினையும் தகவலுக்காக சமர்ப்பித்திருந்தார். சென்ற ஆண்டு அறிக்கை சரியானது என சபையினர் தமது ஏகமனதான சம்மதத்தினை தெரிவித்தனர்.
உறுப்பினர்களின் கருத்துரைக்கான நேரத்தின்போது திரு.தம்பிஜயா பரமானந்தராசா(கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர்), திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை, வாட்டலூ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன், திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம்(கனடா-காரை கலாசார மன்ற முன்னாள் தலைவர்), திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன்(கனடா-காரை கலாசார மன்ற முன்னாள் செயலாளர்) ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சங்கத்தின் தற்போதய கணக்காய்வாளரும், முன்னாள் போசகரும, முன்னாள் தலைவரும் ஆகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் முத்து விழா கண்டதையிட்டு சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தியிருந்ததுடன் அவரது சிறப்புக்கள் மற்றும் சங்கத்திற்கு அவர் வழங்கி வருகின்ற சேவைகள் என்பன குறித்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் உரையாற்றினார்.
உள்ளார்த்தரீதியான கருத்துப் பரிமாற்றங்களுடன் இரண்டரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று பயனுள்ள வகையில் அமைந்த இக்கூட்டத்தின் இறுதியில் செயலாளரினால் நன்றி கூறப்பட்டதைத் தொடர்ந்து தேவாரத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
No Responses to “காரை.இந்துவின் மேம்பாடு என்கின்ற உணர்வு மேலோங்கப்பெற்றிருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம்.”