ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1972 ஆம் ஆண்டில், ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றாடல் தினமாக கடைப்பிடிப்பதற்கான பிரகடனத்தை செய்த பின்பு, ஆண்டுதோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் சுற்றாடல் தினம் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உயிர்களின் வாழ்வு தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு மனித இனத்தை முகம் கொடுக்கச் செய்வதும் சுற்றாடல் கல்விக்கு அழுத்தம் கொடுப்பதும் எம்மைச் சூழவுள்ள சுற்றாடலைப் பாதுகாப்பதில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கான பிரதான நோக்கங்களாகும்.
‘தீவு நாடுகளும் காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினம் இவ்வாண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்ட அமைப்பு ‘உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டத்தை அல்ல’ , ‘Raise Your Voice Not The Sea Level’ என்ற வாசகத்தை’ இவ்வாண்டு சுற்றுச் சூழல் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இத்தினத்தைக் கடைப்பிடித்து சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில் ஜுன் 5, 2014 அன்று உலக சுற்றாடல் தினம் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிகழ்வுகளில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும், ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இத்தினத்தையொட்டி கல்லூரியின்; ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ சுற்றாடலைப் பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம் என்னும் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர். அத்துடன் உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றாடல் தினமும் மரம் நடுகையும்”