பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தோற்றம் பெற்ற பின்னர் கல்லூரியின் முக்கியமான தேவைகளுக்கு ஏற்படும் செலவீனங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை தாங்கள் எமது அறிக்கைகள், இணைய செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
எமது சங்கத்தின் ஒத்துழைப்புடன் கல்லூரி அன்னையின் மகிமை மிக்க புதல்வன் குழந்தை மருத்துவநிபுணர் ‘மருத்துவகலாநிதி’ வி.விஜயரத்தினம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் நிறுவப்பட்ட ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ ஊடாக கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தினம், இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி ஆகிய இரு பிரதான நிகழ்வுகளிற்கும் நிரந்தரமாக உதவிகள் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை தடங்கலின்றி சிறப்புற நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று மற்றொரு பிரதான செயற்பாடாகிய இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான(Extracurricular Activities) உதவி, பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ள பத்து இலட்சம் ரூபாவிற்கான வட்டிப் பணத்திலிருந்து பெறப்பட்டு வருகின்றது.
கல்லூரியின் அடிப்படைத் தேவைகளுக்குரிய செலவீனங்களுக்கு எமது சங்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக உதவி வருவதன் ஊடாக கல்லூரிச் சமூகம் எதிர்நோக்கிவந்த சவால்களை தற்காலிகமாக நீக்கிவைத்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வினை எற்படுத்துவதன் ஊடாக அனைத்துத் தரப்பினரதும் சிரமங்களைத் தவிர்ப்பதுடன்; பாடசாலையின் சுமுகமான நிர்வாகச் செயற்பாடு உறுதிசெய்யப்பட்டு கல்விச் செயற்பாடுகளில் பாடசாலைச் சமூகம் தமது கவனத்தினை செறிவுபடுத்தி கல்லூரியை உன்னதமான நிலைக்கு எடுத்துவரமுடியும் என்கின்ற எண்ணத்தை பல உறுப்பினர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். இதனைக் கருத்திற்கொண்ட எமது சங்கம் குறிப்பிட்ட செலவீனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிரந்தர வைப்புத் திட்டம் ஒன்றினை ஏற்படுத்துவதெனத் தீர்மானித்து இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை திரட்டுகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. எமது இந்த நன்முயற்சிக்கு கல்லூரி அன்னையின் புதல்வர்களிடமிருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்ப்பதுடன் இவை நிச்சயமாகக் கிடைக்கப்பெற்று அனைவரதும் பேராதரவுடன் குறித்த திட்டத்தினை சிறப்பாக நிறைவேற்றி வைக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றி வருகின்றோம்.
அனைவரதும் உதவிகளை பின்வரும்வகையில் எதிர்பார்க்கின்றோம்:
1. இயன்றளவு நன்கொடைகளை வழங்குதல்.
2. மே 19ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் ‘இன்னிசை முழக்கம்’ நிதிசேர் நிகழ்விற்கு அனுசரணை வழங்குதல்.
3. இந்நிகழ்விற்குரிய நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
மேலதிக தொடர்புகளிற்கு: 416-804-0587 அல்லது 647-639-2930
E-Mail: karaihinducanada@gmail.com
அரச உதவிகள் கிடைக்கப்பெறாதவையும், அவசியமானதும் அடிப்படையானதுமான தேவைகளாக இருந்து வருபவை:
1. மின்சாரப் பாவனை
2. தொலைபேசிச் சேவை
3. இணைய சேவை(Wi Fi)
4. குடிநீர்த் தேவை
5. பண்பாடு பேணுதல் (விருந்தினர்களுக்கான உபசரணை)
6. நானாவித தேவைகள்
மேற்குறித்த அடிப்படைத் தேவைகளுள் முதல் மூன்று தேவைகளிற்கும் ஏற்பட்டு வருகின்ற செலவீனங்களிற்கு அரசநிதி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றின் பயன்பாட்டிற்கான மேலதிக செலவீனங்களை சமூகமே பொறுப்பேற்கவேண்டியுள்ளது. மிகுதி ஏனைய தேவைகளிற்கு அரச உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை என்பதுடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாதுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அன்பான வேண்டுகோள்!”