கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவரும், ஈழத்தில் பிரபல்யம்பெற்று விளங்கிய கணிதபாட பட்டதாரி ஆசிரியரும், கனடா-காரை கலாசார மன்றம் என பெயர்மாற்றம் பெற்ற ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகருமாகிய ‘சிவநெறிச்செல்வர்’ தி.விசுவலிங்கம் அவர்கள் ‘இன்னிசை முழக்கம்’ இசை நிகழ்விற்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி:
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒழுங்கமைப்பில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்வாகிய ‘இன்னிசை முழக்கம்’, மே 19, 2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கல்லூரியின் முக்கிய தேவைகளாக இருந்து, அரச உதவிகள் கிடைக்கப் பெறாதவைக்கு உதவும் வகையில் நிரந்தர வைப்புத் திட்டம் ஒன்றினை ஏற்படுத்துகின்ற நோக்கத்தை நிறைவேற்றுமுகமாக நடைபெற இருக்கின்றது. இந்த உயரிய பணியை நிறைவேற்றுவதில் கல்லூரியின் பழைய மாணவர்களும் மற்றும் இசைப் பிரியர்களும் நுழைவுச் சீட்டுகளைப் பெற்று கச்சேரி நிகழ்வில் திரளாகச் சேர்ந்து முழு ஆதரவு நல்க எல்லோரையும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.
பின்னணிப் பாடகர் ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரண் அவர்களும், அணிசெய் கலைஞர்களும் பல பக்திப் பாடல்களுடன் கூடிய இன்னிசைக் கச்சேரியை வெகு விமரிசையாக வழங்க உள்ளனர்.
‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்’
என மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது போல் தம்மாலான நன்கொடைகளையும் அளித்து ஆதரவு நல்க வாரீர். காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்திக்காக இன்னிசைக் கச்சேரி நிகழ்வை ஒழுங்கு செய்து, கல்லூரி மேம்பாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ள அயராது பாடுபடும் பழைய மாணவர் சங்கத்தினருக்கும், அனுசரணை வழங்கி வரும் ஆதரவாளர் களுக்கும் மற்றும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிவரும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
பின்னணிப் பாடகர் ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரண் அவர்களுக்கும், அணிசெய் கலைஞர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்னிசைக் கச்சேரி மிகச் சிறப்பாகவும், பக்தி பூர்வமாகவும் வெற்றிகரமாக நிகழவும் இறைவன் திருவருள் பாலித்தருள வணங்கி உளமார வாழ்த்துகிறேன்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு.
அன்பே சிவம்.
தி. விசுவலிங்கம்
No Responses to “‘இன்னிசை முழக்கம்’ வெற்றி நிகழ்வாக அமைய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் ‘சிவநெறிச்செல்வர்’ விசுவலிங்கம் வாழ்த்துகின்றார்!”