கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04.07.2014) அன்று மிகச் சிறப்பாக நடைந்தேறிய கல்லூரியின் வருடாந்த ‘நிறுவுநர் தினமும் பரிசு தினமும்’ நிகழ்வில் ‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தினை’ அறிமுகம் செய்து பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்கள் ஆற்றிய அறிமுக உரையை இங்கே தருகின்றோம்.
நிகழ்வின் தலைவரும் கல்லூரியின் முதல்வருமான திருமதி வாசுகி தவபாலன் அவர்களே!
பிரதம விருந்தினராக வருகை தந்துள்ள வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களே!
சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ள தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களே!
சங்கானை பிரதேச செயலாளர் திரு.அ.சோதிநாதன் அவர்களே!
கௌரவ விருந்தினராக வருகை தந்துள்ள ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்களே!
அனைவர்க்கும் அன்புசால் வணக்கம்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் கல்லூரி மாணவர்களின் கற்பித்தல் செயற்பாட்டினை ஊக்கிவிப்பதற்காக கல்வி நிருவாகத்தின் ஆலோசனை அனுமதியுடன் கனடா பழைய மாணவர் சங்கம், புலம்பெயர் தேசங்களில் செயல்படும் நலன் விரும்பும் அமைப்புகளின் அநுசரணையுடன் பல பணிகளை நிறைவேற்றி வருகின்றது.
கடந்த ஆண்டு பரிசளிப்பு வைபவத்தின்போது லண்டன் காரை நலன் புரிச் சங்கத்தின் நிதி உதவியாக ஒரு மில்லியன் ரூபா நிரந்தர வைப்பில் இட்டு வருடாந்தம் பெறப்படும் வட்டியினை மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
இன்று ஒன்றரை மில்லியன் ரூபாவினை நிரந்தர வைப்பிலிட்டு வருடாந்தம் பெறப்படும் வட்டியினை வருடாந்த பரிசளிப்பு விழாவினை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தினை’ கையளிக்க உள்ளோம்.
ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய உழைப்பின் ஒரு பங்கினை நல்லதொரு செயற்பாட்டிற்கு நன்கொடையாக வழங்குவது போற்றப்பட வேண்டிய செயற்பாடாகும். இக்கல்லூரியின் கீர்த்தி மிக்க பழைய மாணவரும் கல்விச் செயற்பாடுகளில் விசுவார்த்தமான அக்கறையுடையவரும் எதிர்காலம் வளமான மனித வளத்தை கொண்டதாக அமையவேண்டும் என்னும் சிந்தை கொண்ட சமூக ஆர்வலர் மருத்தவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள ‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ கல்லூரியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கும் எனும் அசையாத நம்பிக்கை உண்டு.
பரிசு சாதனையாளனை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமாக வழங்கப்படுவதாகும்.
பரிசு பெற தவறியவர்களை சாதனையை நோக்கிய பயணத்தை மன வைராக்கியத்துடன் முன்னெடுத்துச்செல்ல ஊக்குவிக்கும்.
போட்டிகளில் பங்குபற்றி பரிசு பெறாமல் ஏனோதானோ என்று இருப்பவர்களின் மத்தியில் சிந்தனை கிளறலை ஏற்படுத்தி மனதில் உத்வேகத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் ஆற்றல்களை கண்டு மகிழ்வடைவர். தம் பிள்ளைகள் கற்க ஆவன செய்யவேண்டும் எனும் தூண்டலை பெற்றோர் மத்தியில் உருவாக்கும்.
பரிசு முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கு வழிசமைக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ மேற்கூறியவற்றை நிறைவுசெய்யும் என்பது நம்பிக்கை.
இந்நிதியத்தை ஆரம்பித்து பேருதவி புரிந்த குழந்தை மருத்தவ நிபுணர் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களை நன்றியுணர்வுடன் கல்லூரிச் சமூகம் பாராட்டுகின்றது.
இச்செயற்பாட்டில் நிருவாகரீதியான அனைத்து உதவிகளையும் வழங்கிய கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களையும் பாராட்டுகின்றோம்.
கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளராக கடமையாற்றிய திரு.ந.பாரதி பொருளாளராக கடமையாற்றிய திரு.ந.விஜயகுமார் ஆகியோரையும் பாராட்டுகின்றோம்.
இந்நம்பிக்கை நிதியத்தினை ஆரம்பிப்பதற்கு ஓராண்டு காலமாக சோர்வின்றி பணியாற்றிய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன், சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர் திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம, கனடா பழைய மாணவர் சங்கத்தினர் அனைவரையும பாராட்டுகின்றோம்.
காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.வி.விஜயகுமார் அவர்கள் அலுவலகப் பணி என்பதற்கும் மேலாக ஒரு படி சென்று ஊக்கமுடன் பணியாற்றியமையை பாராட்டுகின்றோம்.
தீவக வலய கல்விப் பணிமனை அலுவலர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நம்பிக்கை நிதிய ஆவணம் ஒன்றைப் பெற்றுத்தந்து எமது பணியை இலகுபடுத்தியமைக்காக பாராட்டுகின்றோம்.
இடர்களின் மத்தியில் தளர்வின்றி தொடர் பணி ஆற்றுவதற்கு பழக்கப்பட்ட பழைய மாணவர்களின் தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களையும் பாராட்டுகின்றோம்.
மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களை மீண்டும் நன்றியுடன் பாராட்டி விடைபெறுகின்றேன்.
நன்றி! வணக்கம்.
No Responses to “‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ பரிசில் வழங்கலின் உன்னதமான நோக்கங்களை அடைய வழிசமைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடக்கிவைக்கப்பட்டது”