பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் காரை.இந்துவின் மேம்பாடு நோக்கிய நிதிசேர் நிகழ்வாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் இன்னிசை நிகழ்வாகன ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் ‘இன்னிசை முழக்கம்’ வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின்; தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் தெரிவித்துள்ளார்.
கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்தும் காரைநகர் மக்களிடமிருந்தும் இசை ரசிகர்களிடமிருந்தும் கிடைத்து வருகின்ற பேராதரவைப் பார்க்கின்றபோது திரளான மக்கள் கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் சங்கமித்து அற்புதமான இசை நிகழ்வினை ரசித்து மகிழவுள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உன்னத இலக்கு சார்ந்து மிகுந்த நம்பிக்கையையும் பெரும் ஊக்கத்தினையும் அளிப்பதாக திரு.குஞ்சிதபாதம் மேலும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் எதர்பார்பிற்கு அமைய இவ்விசை நிகழ்வு அமைக்கப்பட்டு அதற்கான தயாரிப்புக்களும் பயிற்சிகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. சர்வதேசமெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இசை ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற பின்னணிப்பாடகர் சுப்பர்சிங்கர் சாய் சரண் கனடாவின் புகழ்பெற்ற முன்னணிக் கலைஞர்களின் பக்க இசையுடன் நிகழத்தவுள்ள இவ் இசைக்கச்சேரியின் தொடக்கத்தில் அனைவர் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் கர்நாடக இசைப்பாடல்களை இசைக்கவுள்ள சாய் சரண் கச்சேரியின் பெரும்பகுதியில் பக்திப் பாடல்களையும் அனைவர் மனங்களையும் கவர்ந்த திரைப்படங்களில் இடம்பெற்ற கர்நாடக இசைப் பாடல்களையும் பாடவுள்ளார்.
இடைவேளையற்ற இரண்டரை மணிநேரத்திற்கு மேற்பட்ட இசைவேளையாக ‘இன்னிசை முழக்கம்’ அமைந்திருந்தாலும் ரசிகர்களின் வசதி கருதி தேநீரும், சிற்றுண்டிகளும் இலவசமாக தொண்டர்களினால் பரிமாறப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ள திரு.குஞ்சிதபாதம் காரை.மண்ணின் நீண்ட பழமையையும், சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டு விளங்கும் முதன்மைப் பாடசாலையான காரை.இந்துவின் முக்கியமான தேவைக்கு உதவுகின்ற உன்னதமான நோக்குடன் நடாத்தப்படுகின்ற இவ்இசை நிகழ்விற்கு காரைநகர் மக்களும், இசை ரசிகர்களும் திரளாக வருகை தந்து ஆதரவு நல்குமாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் வேண்டிக்கொண்டுள்ளார்.
சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உதவித் திட்டத்திற்கு இயன்ற நன்கொடைகளும் வரவேற்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No Responses to “சுப்பர் சிங்கர் சாய் சரணின் இன்னிசை முழக்கம் இசை நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.”