காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒழுங்கமைப்பில் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடைபெற்றிருந்த ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் இன்னிசை முழக்கம் இசை நிகழ்வு அனைத்து வகையிலும் பெரு வெற்றி நிகழ்வாக அமைந்து விட்டமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பெரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தியுள்ளது.’ சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் அற்புதமான இசை, மண்டபம் நிறைந்த ரசிகர்களை மூன்றுமணி நேரத்திற்கு மேலாக கட்டிப்போட்டிருந்தது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்காக நிரந்தர வைப்புத் திட்டத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான நிதியினைத் திரட்டும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்விற்கு பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும அனுசரணையாளர்களும் வழங்கியிருந்த பேராதரவினால் செலவுகளைத் தவிர்த்து பத்தொன்பது இலட்சம் ரூபாவினை மீதப்படுத்தக்கூடியதாக இருந்தது என நிகழ்வின் அரங்கில்வைத்து பழைய மாணவர் சங்க கிளையின் சார்பில் செயலாளரினால் அறிவிக்கப்பட்டபோது மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் பலத்த கரகோசம் செய்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.
முதற்கட்டமாக இருபது இலட்சம் ரூபாவினைத் திரட்டுதல் என்ற சங்கத்தின் இலக்கில் ஒரு இலட்சம் ரூபா மட்டுமே குறைவாகவிருந்ததை அவதானித்த கல்லூரியின் விசுவாசம் மிக்க பழைய மாணவன் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவினை வழங்க முன்வந்ததன் மூலம் இருபது இலட்சம் ரூபா என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு சிறப்புக்களைக் கொண்டு விளங்கிய உன்னதமான இசை நிகழ்வு குறித்த முழுமையான செய்தியும் புகைப்படங்களும் விரைவில் எடுத்துவரப்படும்.
No Responses to “பெரும் வெற்றி நிகழ்வாக அமைந்துவிட்ட இன்னிசை முழக்கம்! இருபது இலட்சம் ரூபா என்ற இலக்கு எட்டப்பட்டதாக அறிவிப்பு!”