பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அழைப்பினை ஏற்று வருகை தந்து அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கிய பின்னணிப்பாடகர் ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரண் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் இராப்போசன விருந்தளித்து மதிப்பளிதிருந்தது. நேற்றைய தினம் சங்கத்தின் பொருளாளர் திரு. மா.கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் சங்கத்தின் தலைவர் திரு.நா.குஞ்சிதபாதம் தலைமையில் நடைபெற்ற இவ்விருந்துபசாரத்தில் நிர்வாக சபை உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
வாட்டலூ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கனக சிவகுமாரன் ஆகியோர் சாய் சரணைப் பாராட்டி நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்தனர். தான் பன்னிரண்டு தடவைகளுக்கு மேலாக கனடா வந்து சென்றதாகவும் இம்முறைப் பயணத்தின்போது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் உபசரிப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்திருந்து என்றென்றும் நினைவிலிருக்கும் வண்ணம் பதிந்து விட்ட பயணங்களுள் ஒன்றாக அமைந்து விட்டது எனத் தெரிவித்த சாய் சரண் இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார். கனடாவில் பல மெல்லிசை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தேனாயினும் கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றினை நிகழ்த்தவேண்டும் என்ற தனது நீண்டகால விருப்பத்தினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிறைவேற்றி வைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மூன்று மணி நேரத்திற்கு மேற்பட்ட தனது இசைக்கச்சேரியின்போது மண்டபத்திலிருந்து எவருமே கலைந்துசெல்லாது இறுதிவரையிருந்து ரசித்தமையும் கச்சேரியின் நிறைவில் அனைவரும் எழுந்துநின்று பாராட்டியமையும்(Standing Ovation) மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்டார். பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தாயக மாணவர்களின் கல்;விக்காக வழங்கி வருகின்ற உதவிகள் குறித்து பாராட்டுத் nதிரிவித்த சாய் சரண் இதற்கு தனது சிறிய பங்களிப்பினை வழங்கக் கிடைத்த வாய்ப்புக் குறித்து மனநிறைவடைவதாகத் தெரிவித்தார்.
விருந்தபசார நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை இராப்போசன விருந்து வழங்கி மதிப்பளித்தது.”