கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த நிறுவுநர் தினமும் பரிசு தினமும் கடந்த வெள்ளிக்கிழமை (04-07-2014) அன்று காலை 9:30 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, கலாசார, விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு ச.சத்தியசீலன்; அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்களும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் திரு.இரதாக்கிருஸ்ணன், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
காலை 9:30 இற்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் கோவிலில் வழிபாடு செய்து மேலைத்தேய மற்றும் கீழைத்தேய பான்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் நடராசா ஞாபாகார்த்த மண்டபம் நோக்கி மாணவர்களினால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
நிறுவுநர் முத்து சயம்பரின் சிலைக்கு கௌரவ விருந்தினர் திரு.த.மேகநாதன் அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணங்கிய பின் மண்டப முன்றலில் இலங்கை தேசியக் கொடியை பிரதம விருந்தினரும் கல்லூரிக் கொடியை அதிபரும் ஏற்றி வைத்தனர். தமிழர் பாரம்பரியமுறையில் கல்லூரியின் ஆசிரியை திருமதி.கலாநிதி சிவநேசன் விருந்தினர்களை தாம்பூலத்துடன் வரவேற்றார். மங்கல விளக்கினை விருந்தினர்கள், அதிபர், பழையமாணவ பிரதிநிதிகள் ஏற்றினர்.
இறைவணக்கம், வரவேற்புப் பாடல் மாணவர்களினால் இசைக்கப்பட்ட பின்னர் கல்லூரியின் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன் தனது வரவேற்புரையில் விருந்தினர்களையும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பரிசில் தின அறிக்கையை வாசித்தார். அறிக்கையின் பிரதி விழாவிற்கு சமூகமளித்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
நிறுவுனர் நினைவுப் பேருரையை கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள் நிகழ்த்தினார்.
கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் மற்றுமோர் மைல்கல்லாக ‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தினை’ அறிமுகம் செய்து பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்கள் உரையாற்றியமையைத் தொடர்ந்து நிதியத்தின் சான்றிதழ் கல்லாரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களிடம் பிரதம விருந்தினரால் கையளிக்கப்பட்டது.
இந்நிதியத்தினை நிறுவிய கனடாவில் வதியும் பெருங்கொடையாளர் குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கல்லூரிச் சமூகத்தினாலும் காரைநகர் மக்களாலும் என்றும் நன்றியுடன் போற்றப்படவேண்டியவர். இதற்கு ஆதாரமாக இருந்த கல்லாரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் உறுதுணையாக உழைத்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் தாய்ச் சங்கத்தின் போசகர் திரு.S.K.சதாசிவம் மாஸ்டர் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் பிரதம விருந்தினரால் தொடக்கி வைக்கப்பட்டது. பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகள். பொதுத்திறன், வாழ்க்கைத்தேர்ச்சி, வரவு ஒழுங்கு ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்குரிய பரிசில்களை விருந்தினர்கள் வழங்கினர். முதலில் இளநிலை, இடைநிலை மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
அடுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ்; உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து இடைநிலை, முதுநிலை மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
அடுத்து சிறப்பு ஞாபாகார்த்தப் பரிசுகளாக க.பொ.த.(சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற நால்வருக்கு அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபாகார்த்தப் பரிசு, க.பொ.த.(சா-த), க.பொ.த(உ-த) பரீட்சையில் சங்கீத பாடத்தில் A தர சித்திபெற்ற ஆறு மாணவர்களுக்கு அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபாகார்த்தப் பரிசு, 2013 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான பரிசாக அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்தப் பரிசினை செல்வி றோஜனா தேவராஜாவும் பெற்றுக் கொண்டனர்.
தேசியமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றியமைக்கான விருதினை 10 ஆம் வகுப்பு மாணவி செல்வி விதுசாவும் கல்லூரியின் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கல்லூரியின் உப அதிபராகக் கடமையாற்றிய திரு.ந.விஜயகுமார் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண கல்வி, கலாசார, விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு ச.சத்தியசீலன்; அவர்கள் உரை நிகழ்த்தியமையைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகள் அதிபரினால வழங்கப்பட்டன.
அடுத்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளின் வரிசையில் கல்லூரியின் நடன ஆசிரியை நாட்டியகலைமணி திருமதி.பேர்லின் ஷைலா சந்திரதாசன் அவர்களின் தயாரிப்பில் ‘நள தமயந்தி சுயம்பரம’; என்ற நாட்டிய நாடகம் சபையோரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
அடுத்து மாணவாகளின் Action Song நிகழ்வும் நடைபெற்றிருந்தது.
கல்லூரியின் ஆசிரியை திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்ப்பண், கல்லூரிப் பண் இசைக்கப்பட்டு கொடியிறக்கப்பட்டதுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.
இவ்வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கியிருந்தது. யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளுக்கு நிகரானதாக சென்ற ஆண்டிலிருந்து இப்பரிசளிப்பு விழா மிகநேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “மிகச் சிறப்பாக நடந்தேறிய நிறுவுநர் தினமும் பரிசு தினமும்”