காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் சென்ற 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற பின்னணிப் பாடகர் ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் ‘இன்னிசை முழக்கம்’ என்கின்ற மகுடத்தின் கீழான இசைக் கச்சேரி உன்னதம் பெற்று விளங்கியது மட்டுமல்லாது இந்த நிகழ்வின் மூலமாக இருபது இலட்சம் ரூபாவினைத் திரட்டுகின்ற இலக்கினை அடைந்ததன் மூலம் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினர் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து மீண்டும் ஒரு முக்கியமான வரலாற்றுப் பணியினை நிறைவுசெய்வதற்கான நிதி வளத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அற்புதமான இசை நிகழ்வினை கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆவலுடனும் காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்தவேண்டும் என்ற உள்ளுணர்வோடும் காரை.இந்துவின் புதல்வர்களும், நலன் விரும்பிகளும் இசை நிகழ்வு நடைபெற்ற கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தை நோக்கி மாலை 5.00 மணி தொடக்கம் வருகைதர ஆரம்பித்தனர். சரியாக மாலை 6.00மணிக்கு மண்டபத்திலுள்ள இருக்கைகளில் பெரும்பகுதி நிரம்பிய நிலையில் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் தொடங்கப்பெற்றன.
முதலில் மங்கள விளக்கேற்றிவைக்கப்பட்டு மங்களகரமாக இசை நிகழ்வு தொடக்கிவைக்கப்பட்டது. பிரதம விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வருகை தந்து கலந்துகொண்ட கல்லூரியின் மகிமைமிக்க பழைய மாணவனும், இயந்திரப் பொறியியலாளரும், புவி விஞ்ஞானியுமாகிய திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன், கனடா சைவசிந்தாந்த மன்றத்தின் தலைவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகருமாகிய சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவரது பாரியார் வடிவழகாம்பாள், குழந்தைமருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம், தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம், கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தவைரும் கணக்காளருமான திரு.வே.இராஜேந்திரம் அவரது பாரியாரான கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவ தலைவி கமலாதேவி, பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் முன்னாள் போசகருமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவரது பாரியார் புஸ்பலீலா ஆகியோர் மங்கள இசை முழங்க மங்கள விளக்கேற்றி வைத்திருந்தனர்.
சகோதரிகளான செல்வி பவிஷா மோகனேந்திரன், செல்வி நிந்துஜா மோகனேந்திரன் ஆகியோர் கடவுள் வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, கனேடிய தேசியகீதம் என்பனவற்றை அழகுற இசைத்ததைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் மரணித்த தமிழ் மக்களுக்காகவும் யுத்தத்தினால் இறந்த ஏனைய தமிழ் மக்களுக்காகவும் கல்லூரிச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மறைவிற்கும் சபையினர் எழுந்து நின்று இரு நிமிடநேர அக வணக்கம் செலுத்தியிருந்தனர். பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் உப-தலைவர்; திருமதி செல்வ இந்திராணி சித்திரவடிவேல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனையடுத்து கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி பங்கையற்செல்வி முகுந்தன், திருமதி கலாசக்தி றொபேசன் ஆகியோர் இணைந்து பாடிப் பதிவுசெய்யப்பட்ட கல்லூரிக் கீதம் ஒலிபரப்பப்பட்டபோது அனைவரும் எழுந்துநின்று தமது வளமான வாழ்விற்கு வழிகாட்டிய கல்லூரி அன்னைக்கு மதிப்பளித்திருந்தனர்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த புவி விஞ்ஞானி சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவர்களை அறிவிப்பாளர் திரு.ஞானசம்பந்தன் அறிமுகம் செய்துவைத்து உரையாற்ற அழைத்தார். திரு.திருஞானசம்பந்தன் தமது உரையில் கல்லூரிக்காலத்து பசுமையான நினைவுகளை சபையோருடன் பகிர்ந்துகொண்டதுடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றி வருகின்ற அளப்பரிய பணிகளை வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வதாகவிருந்த கல்லூரியின் பழைய மாணவனும், சுவிற்சலாந்து Siva Travel பிரயாண முகவர் நிறுவனத்தின் அதிபருமான சிவா கனகசுந்தரம அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ள முடியாமை குறித்து அறிவித்திருந்ததுடன் இசை நிகழ்வு வெற்றிபெற தமது வாழ்த்தினையும் தெரிவித்திருந்தார்.
அடுத்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் உரையாற்றி இசை நிகழ்வை தொடக்கி வைத்தார்.
இசை நிகழ்வை வழங்கிய ‘சுப்பர் சிங்கர் சாய்’ சரணும் ஏனைய பின்னணி இசை வழங்கிய கலைஞர்களான சங்கீதகலாவித்தகர் ரி.என்.பாலமுரளி(வயலின்), மிருதங்ககலாவித்தகர் ரதிரூபன் பரஞ்சோதி(மிருதங்கம்), தாளவாத்தியக்கலைஞர் திரு.நரேந்திரா தில்லையம்பலம்(தபேலா,கடம்), மேகா இசைக்குழுவின் மகேசன் அரவிந்தன்(கீபோட்), ‘கலைமாமணி’ ராஜேஸ்வைத்தியாவின் மாணவியான செல்வி பிரியா ரட்ணகுமார்(வீணை) ஆகிய கலைஞர்கள் சிறப்பானமுறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். கனடாவின் முன்னணி அரங்க அறிவிப்பாளரும் எமது கல்லூரியின் பழைய மாணவனுமாகிய பா.ஞானபண்டிதன் அவர்களின் அழகான அறிவிப்பினால் கவரப்பட்ட சாய் சரண் மகிழ்ந்து அவரைப் பாராட்டியிருந்தமை எமக்கு பெருமையளிப்பதாகும். இலட்சக்கணக்கான இசை ரசிகர்களின் அபிமானத்தைப்பெற்ற அற்புதமான இசைக்கலைஞர் சாய் சரணினதும் கனேடிய தமிழ் இசை உலகின் முன்னணிக் பக்கவாத்தியக் கலைஞர்களினதும் இசைப்பின்புலம் குறித்தும் அவர்களது இசைத் திறமை குறித்தும் அறிவிப்பாளர் ஞானபண்டிதனின் அறிமுகம் மூலம் தெரிந்துகொண்ட சபையினர் எதிர்பார்ப்பும் ஆவலும் மேலிட்டவர்களாக இசைக் கச்சேரியை கேட்டு மகிழத் தயாரானார்கள். இச்சந்தர்ப்பத்தில் அதிக மக்களின் வருகையினால் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளுடன் இசை ரசிகர்கள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பான சபையாக அமைந்திருந்தது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் நடப்பு நிர்வாகத்தின் தலைவரான திரு.சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம், செயலாளரான திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி, பொருளாளரான திருமதி இந்திராதேவி ஜெயானந்தன் ஆகியோரும் நிர்வாகிகளும் இந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தமை சிறப்பானதாகும்.
சரியாக மாலை 7.00மணிக்கு வர்ணத்தோடு பாட ஆரம்பித்த சாய் சரண் தனது மூன்றேகால் மணிநேர கச்சேரியில் அனைவரும் நன்கு அறிந்த கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும் திரைப்படங்களில் இடம்பெற்று அனைவர் நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும் கர்நாடக இசைப் பாடல்களையும் பாடி முடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபையினர் அரங்கம் அதிர பலத்த கரகோசம் செய்திருந்தமையானதும், கச்சேரியின் நிறைவு வரை எவரும் கலைந்துசெல்லாது பொறுமையாக இருந்து ரசித்தமையும் கச்சேரியின் உன்னதத் தன்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற கர்நாடக இசைக் கச்சேரிகளில் ஆரம்பத்திலிருந்த ரசிகர்களில் பலரும் கலைந்துசெல்ல இறுதிவரை குறைந்த அளவு ரசிகர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன் இரண்டரை மணிநேரத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்த இக்கச்சேரியானது ரசிகர்களின் பலத்த வரவேற்புக் காரணமாக அதனையும் தாண்டி மூன்றேகால் மணிநேரத்திற்கு நீடித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.; மொத்தத்தில் சபையினரைக் கட்டிப்போட்டிருந்த இசை நிகழ்வாகவே இன்னிசை முழக்கம் அமைந்துவிட்டது. சாய் சரண் தில்லானா பாடி மங்களத்துடன் கச்சேரியை நிறைவுசெய்தபோது சபையினர் அனைவரும் கரகோசம் செய்தவண்ணம் எழுந்துநின்று சாய் சரணையும் ஏனைய கலைஞர்ளையும் பாராட்டியிருந்திருந்தமை உணர்வுபூர்வமான தருணமாக அமைந்திருந்தது.
சாய் சரணும், அணிசேர் கலைஞர்களும், நிகழ்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய பா.ஞானபண்டிதனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் எற்பாட்டாளர்களான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் நாகலிங்கம் குஞ்சிதபாதம் சாய் சரணுக்கும், குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் வயலின் இசைக் கலைஞர் ரி.என்.பாலமுரளி அவர்களுக்கும், தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் மிருதங்க கலைஞர் ரதிரூபன் பரஞ்சோதி அவர்களுக்கும் கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவரும் கணக்காளருமான தம்பிஐயா பரமானந்தராசா தபேலா, கடம் ஆகியவற்றை இசைத்த கலைஞர் தில்லையம்பலம் நரேந்திரா அவர்களுக்கும், வீடு விற்பனை முகவரான நடராசா ஜெயகுமார் கீபோட் கலைஞர் மகேசன் அரவிந்தன் அவர்களுக்கும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் திருமதி பிரபா ரவிச்சந்திரன் வீணைக் கலைஞர் செல்வி பிரியா ரட்ணகுமார் அவர்களுக்கும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாகசபை உறுப்பினரும் முன்னாள் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளருமாகிய நமசிவாயம் அம்பலவாணர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பா.ஞானபண்டிதன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மதிப்பளித்தபோது சபையினர் கரகோசம் செய்து தங்களது உற்சாகமான பாராட்டினை வெளிப்படுத்தினர்.
கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டமையைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளர் கனக சிவகுமாரன் அவர்கள் நிகழ்வைச் சிறப்பாக அமைக்கவும், சங்கத்தின் இலக்கினை எட்டவும் உதவியும் ஒத்துழைத்தும் இருந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிதெரிவித்து உரையாற்றினார்.
செயலாளர் தனது நன்றியுரையை நிகழ்த்துவதற்கு முன்பாக, பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் சார்பில் அறிவிப்பு ஒன்றை செய்திருந்தார். இசை நிகழ்வின் மூலமாக 14000.00 டொலர்களை மீதப்படுத்த முடிந்தமை குறித்து செயலாளர் அறிவித்தபோது சபையினர் பலத்த கரகோசம் செய்து தமது மகிழ்ச்சியையும் பாராட்டினையும் வெளிப்படுத்தியதை அவதானிக்கமுடிந்தது. நிகழ்வின் ஊடாக கிடைக்கப்பெற்ற மொத்த நிதியில் அறுபத்தைந்து சதவீதமான நிதி பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டதன் மூலமும் நன்கொடைகள் வழங்கியதன் மூலமும் கிடைக்கப்பெற்றிருந்தது என்பதுடன் மிகுதி முப்பத்தைந்து சதவீதமான நிதி அனுசரணையாளர்களினால் உதவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் அனைவரதும் ஒருங்கிணைந்த உதவிகளுக்கும் ஆதரவிற்கும் சிரம் தாழ்த்திய நன்றியை செயலாளர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
இசைக்கச்சேரி நிறைவுற்றதும் பலரும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளைத் தேடிச்சென்று இசை நிகழ்வின் நேர்த்தியான ஒழுங்கமைப்பைப் பாராட்டியிருந்ததுடன் சாய் சரணின் அற்புதமான இசையினை கேட்டு மகிழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்தமைக்காக தமது நன்றியையும் பாராட்டினையும்; தெரிவித்துக்கொண்டனர். அதேவேளை பலரும் தொலைபேசி ஊடாக நிர்வாகிகளை அiழைத்து தமது பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
எதிர்பார்த்ததைக்காட்டிலும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வியக்கத்தக்க வகையில் வழங்கிய பேராதரவினால் ‘இன்னிசை முழக்கம்’ முற்றிலும் நிறைவான ஒரு இசை நிகழ்வாக அமைந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வரலாற்றில் பதிவாகி விட்டமை குறித்து எமது சங்கம் பெருமையும் பேருவகையும் அடைவதாகத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் நாகலிங்கம் குஞ்சிதபாதம் இது தமக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் ஊக்குவிப்பையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இசை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
புகைப்பட உதவி: திருமதி மலர் குழந்தைவேலு, கே.கே.எலொக்றோனிக்ஸ்.
No Responses to “காரை.இந்து அன்னையை குதூகலிக்க வைத்து அன்னையின் புதல்வர்களைப் பரவசப்படுத்தி வரலாற்றுப் பதிவாகிய ‘இன்னிசை முழக்கம்’”