உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அமரர் நமசிவாயம் நடராஜா K.C. அவர்களும் அன்னாரது பாரியார் அமரர் தங்கம்மா அவர்களும் காரை.இந்துவிற்கும் காரை.மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய பணிகள் குறித்த கட்டுரை 2013ஆம் ஆண்டு கல்லூரியின் 125வது ஆண்டு விழா மலராக வெளியிடப்பெற்றிருந்த ‘சயம்பு’ மலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இக்கட்டுரையினை கல்லூரியின் பழைய மாணவனும், ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியருமான திரு.அருளையா நமசிவாயம்பிள்ளை அவர்கள் எழுதியிருந்தார். கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவர்களது பணி குறித்த முக்கியமான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய இக்கட்டுரையின் சிறப்புக் கருதியும், அவர்களை நன்றியோடு நினைகூரும் வகையிலும் இக்கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகிறது:
உயர் நீதிமன்ற நீதியரசர் நமசிவாயம் நடராஜா K.C.
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் உத்தம சீடர்களில் முதன்மையானவர் களபூமியைச் சேர்ந்த நீதியரசரான அமரர் நமசிவாயம் நடராஜா ஆவார்.பெரும் கல்விமானான இவர் சட்டத்தரணியாக (Supreme Court Advocate) கடமையாற்றியவர். K.C. பட்டம் பெற்றவர். சிறந்த சிவ பக்தரும் கூட. நீதி மன்ற வேலைகளில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காரைநகர் வந்து வெள்ளிக்கிழமை காலைப் பூசையின்போது சிவன்கோயிலில் நடைபெறும் திருமுறைப் பாராயண நிகழ்வில் சயம்பு உபாத்தியாருடனும், மாணவர்களுடனும் சேர்ந்து சிவ தியானத்தில் ஈடுபடுவர். நடராஜா அவர்களது சட்டத்துறைத் தேர்ச்சியை கண்ணுற்ற நீதியமைச்சு இவரை மேல்மன்ற நீதிபதியாக (Supreme Court Judge) நியமித்தது.
தனது சேவைக் காலத்தில் 1947ஆம் வருடம் இவர் முன்னேவந்த கிரிமினல் வழக்கொன்றில் எதிரி குற்றவாளியென்று ஜுரர்கள் ஒரு முகமாகத் தீர்மானித்தார்கள். சாட்சிகளின் வாக்குமூலங்களும் சந்தேகமின்றி குற்றச்சாட்டினை நிரூபித்தன. வேறுவழிகள் ஏதுமின்றி நீதிபதி நடராஜா எதிரிக்கு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
வீடு வந்த நீதிபதியின் மனம் வெம்பியது. சீ, சீ என்ன பாவச் செயல்! என் கல்வி, தொழில் என்பன ஒரு மனிதனுக்கு தூக்குத் தண்டனை வழங்கவா? சிவனே! சிவனே! என்று கூத்தப் பிரானைத் துதித்தார். அக்கணமே அவரது ஆவி பிரிந்தது. ஐம்பதாவது வயதில் அமரரானார்.
அவரது பாரியார் தங்கம்மா அம்மையார் பெரிதும் மனம் நொந்தார். மனம் கலங்கினார்.
‘நில்லாதவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை’
என்ற திருவள்ளுவரின் வாக்கின் படி நிலையாத வாழ்க்கைத் தத்துவத்தினை உணர்ந்தார்.
‘நடலை வாழ்வு கொண்டென் செய்தீர் நாணவீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூக்முனி பண்டமே’
என்ற திருநாவுக்கரசர் தேவாரத்தை சிந்தித்தார். இளமை, யாக்கை, செல்வம் நிலையாமையும் அதன் முன் யாம் செய்ய வேண்டியவற்றையும் எண்ணினார். எஞ்சிய தம் வாழ்நாளில் செய்துமுடிக்க வேண்டிய பணிகளைச் சிந்தித்தார்.
நீதிபதி நடராஜா நாளுக்கு நாள் தேடிச் சேகரித்த அரும்பெரும் சட்ட நூல்களை சட்டக் கல்வி கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இலங்கைப் பல்கலைக்கழக சட்ட நூல் நிலையப் பிரிவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
1950ஆம் வருடம் சயம்பு பாடசாலைக்கு எதிர்ப்புறமாக அமைந்திருந்த அவர்களுக்கு உரித்தான காணியில் சுமார் 20பரப்பு நிலத்துண்டில் 60ஆயிரம் ரூபா செலவில் பிரமாண்டமான நடராஜா ஞாபகார்த்த பிரார்த்தனை மண்டபத்தினைக் கட்டுவித்தார்.NADARAJAH MEMORIAL HALL எனப் பெயரிட்டு இலங்கையின் அப்போதய நிதிமந்திரி கௌரவ எ.எஸ்.ராஜபக்ஷ அவர்கள் மண்டபத்தினைத் திறந்துவைக்க இலங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் ஐவர் ஜென்னிங்ஸ் அவர்கள் நடராஜா K.C. அவர்களது முழு உருவப் படத்தினை திரை நீக்கம் செய்துவைத்தார்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பெரிய மண்டபமாக கணிப்பிடப்பட்டது. மாணவர்கள் காலைப் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுவர். பொதுப் பரீட்சைகள், ஒன்றுகூடல்கள், கலை நிகழ்வுகள் எனப் பற்பல நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன.
1991இல் காணப்பட்ட பதற்றமான நிலை காரணமாக மக்கள் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தனர். இக்காலத்தில் மண்டபத்தின் கோப்புசம் பெரிதும் சேதமுற்று நீண்ட காலமாகத் திருத்தமற்றிருந்தது. சென்ற 2012ஆம் வருடம் கல்வித் திணைக்களத்தினர் ஐந்து மில்லியன் ரூபா செலவில் கோப்புசத் திருத்தம் செய்து புனருத்தாரணம் செய்து தற்போது புதுமெருகேற்றியுள்ளனர். கோப்புசம் திருத்தம், புதிய ஓடுகள் மாற்றம், மின் விசிறிகள் பொருத்தம், புதிய சாளரங்கள் என பல திருத்தங்கள் இதனுள் அடங்குகின்றன. புதிய ஓடுகள் பதிக்கும் வேலையாள் வேதனத்தை பழைய மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
தங்கம்மா அம்மாவின் பொதுப்பணி நோக்கு காரை வாழ் மக்களின் வைத்திய சேவையின் பக்கம் திரும்பியது. நடராஜா மண்டபத்தின் மேற்கு எல்லையில் இருந்த இவரது காணித் துண்டில் மகப்பேற்று நிலையத்தை(Maternity Home)கட்டுவித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். அக்காலத்தில் பிரசவத்திற்காக மக்களின் ஒரு பகுதியினர் மூளாய், இணுவில் ஆகிய வைத்தியசாலைகளுக்கும் மறு பகுதியினர் தங்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தங்கம்மா அம்மையார் இப்பிரசவ மனையில் பிள்ளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு தலா ஒரு பறை நெல்லு இலவசமாக வழங்கினார். இலவசமாக நெல் கிடைக்கும் என்பதற்காக அநேகமான பிள்ளைப்பேறுகள் இங்கேயே நடைபெறத் தொடங்கின.
கலாநிதி ஆ.தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஆண்கள் வாட், பெண்கள் வாட், மருத்துவர் அறை, மருந்தக அறை என பல வசதிகள் பெற்று சுற்றயல் கூறு(Peripheral Unit)வைத்தியசாலையாக தரமுயர்ந்தது. அமரர் தியாகராசா மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் 2003ஆம் ஆண்டு காரைநகருக்கு தனியான பிரதேச செயலகம்(Divisional Secretariat)கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது பிரதேச வைத்தியசாலையாக(Divisional Hospital) தரமுயர்ந்துள்ளது. காரை.வாழ் மக்களுடன் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை, சித்தன்கேணி போன்ற இடத்து மக்களும் வந்து இவ்வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தங்கம்மா அம்மையார் வைத்தியசாலைப் பணி நிறைவுற்றதும் தெற்குப்பகுதியில் எஞ்சியிருந்த ஏறத்தாழ 40பரப்பு நிலத்தினை பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்காக உபகரித்தார். இப்போது விளையாட்டு மைதானததின் தளம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் உடற்பயிற்சிகள், உதை பந்தாட்டங்கள், கிரிக்கட் போட்டிகள் போன்ற நானாவித செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.
ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் காரைநகர் சிவன்கோயிலின் வடக்கு வீதியில் பிராமண அக்கிரகாரங்களுக்கு அருகாமையில் 1961ஆம் ஆண்டு பெரிய சிவாச்சிரமம் ஒன்றை நிர்மாணித்து அங்கே கூத்தப்பிரானை பிரதிஷ்டை செய்து தெய்வீக ஒளி ஏற்றினார். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிவ அடியார்கள் வந்து திருமுறைகள் ஓதி கூத்தப்பிரானுக்கு பூசை நடைபெற்று சிவதரிசனம் பெற்று ஆன்மீக வாழ்வை வளர்த்தார்கள். வருடந்தோறும் வரும் நடராசருக்குரிய ஆறு அபிஷேக தினங்களிலும், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அடியவர்களுக்கு அமுதளிக்கப்பட்டு வந்தது. மார்கழித் திருவெம்பாவை உற்சவத்தின்போதும் அன்னதானம் நடைபெற்று வந்தது. சமய குரவர்களின் குருபூசைகளும் நடைபெற்றன. அத்தோடு காரை. மாணவர்களுக்கு வெளியூர்களிலிருந்து சங்கீத வித்துவான்களை அழைத்து பண்ணிசை வகுப்புக்களை நடாத்தினார். அப்போது வெளியிடப்பட்ட ‘சிவாச்சிரமம்’ சஞ்சிகையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக சிவன் ஒளி வீசிய சிவாச்சிரமம் தனக்குப் பின்னரும் தொடர்ந்து சைவ மக்களின் ஆன்மீக வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனக் கருதி ஏக்கர் கணக்கில் நெற்காணிகளையும், பெரிய தொகை நிதியினையும், வாரிசுகளையும் நியமித்து தங்கம்மா அம்மையார் சிவபதம் அடைந்து விட்டார். 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் இடப்பெயர்வு, உரியவர்களின் அசிரத்தை என்பன காரணமாக அந்தப்பெரிய சிவ அன்னதான சாலை பொலிவிழந்து தூங்குகின்றது. அன்னதான சபையினர் கவனிப்பார்களா?
இவ்வாறாக அமரர்களான நமசிவாயம் நடராஜா K.C., தங்கம்மா நடராஜா தம்பதியினர் காரைநகர் மக்களுக்கு கல்விச் சேவை, வைத்திய சுகாதார சேவை, விளையாட்டு மைதானம் போன்ற அளப்பரிய சேவைகளை ஆற்றிவந்தனர். இளம் தலைமுறையினர் அறியும் பொருட்டும், வருங்கால சரித்திரவியலாளர் நன்மை கருதியும் இவற்றை இங்கு பிரசுரிப்பது சாலப் பொருத்தமல்லவா?
கட்டுரை நிறைவுற்றது.
கல்வித் திணைக்களத்தின் உதவியுடன் மண்டபத்தின் சேதமுற்ற பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டும்¸ இருக்கைகள் இடப்பட்டும் புதுப்பொலிவு பெற்றுள்ள மண்டபத்தின் பல்வேறு கோணங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. லண்டனில் வதியும் பழைய மாணவனான திரு.வெற்றிவேலு நடராசா அவர்களினால் 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதி உதவியுடன் அரங்கிற்கு அழகிய வர்ண திரைச் சீலைகள் இடப்பட்டும் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா¸ அமரர் நமசிவாயம் நடராஜா K.C. ஆகியோரின் திருவுருவப் படங்கள் மீளவும் அழகியவடிவில் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதும்¸ பழைய மாணவர் சங்க கனடாக் கிளை சென்ற ஆண்டு வழங்கிய முழுமையான நிதி உதவியுடன் வர்ணம் பூசப்பட்டு மேலும் அழகு சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “அமரர்கள் நமசிவாயம் நடராஜா K.C.., தங்கம்மா நடராஜா தம்பதியினர் காரை.இந்துவிற்கு ஆற்றிய பணிகளும், காரை.மக்களுக்கு ஆற்றிய பொதுப் பணிகளும்.”