கடற் சூழல் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிலையினை ஏற்படுத்தும் செயற்திட்ட நிகழ்வானது 29.05.2019 அன்று முற்பகல் 9.00 மணியளவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் வளவாளராக கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட உதவி கடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.அஷானி அருளானந்தம் அவர்கள் பங்குபற்றி இருந்ததுடன் அவருக்கு உதவியாக வெளிக்கள அலுவலர் திரு.எம்.எச்.ஆதி அவர்கள் பங்குபற்றி இருந்தார். இவர்களுடன் கல்லூரியின் விஞ்ஞான பாட ஆசிரியர்களும் சுற்றாடல் முன்னோடிக் குழு மாணவர்களும் பங்குபற்றி இருந்தனர்.
இந்நிகழ்வானது அதிபரின் வரவேற்புரை மற்றும் தலைமையுரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வளவாளர் செல்வி அஷானி அவர்களால் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உருவாக்கம் அதன் நோக்கம் என்பவற்றை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கியதுடன் கடற் சூழலை பாதுகாப்பதற்காக மாணவர்கள் குழுவாக இணைந்து செயற்படல் சிறந்தது என்னும் கொள்கையின் அடிப்படையில் தற்பொழுது 9 கடற்கரைப் பிரதேச மாவட்டங்களிலுள்ள 300 பாடசாலைகளிலிருந்து ஒரு பாடசாலையில் 40 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். அதிகரித்த பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் சூழல் தொடர்பான பிரச்சினைகள், அத்துடன் இப்பிளாஸ்ரிக் பொருட்கள் அக்கறையற்று சூழலில் விடப்படுவதால் கடற் சூழல் மாசுபடுதல் அதனால் கடல் வாழ் உயிரினங்களின் அழிவு, அருகிவரும் கடல் உயிரினமான ஆமை பற்றியும் பவளப் பாறைகளின் அழிவு பற்றியும் வளவாளரினால் தெளிவான விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து அவர்களிற்கு கடல் சூழல் மாசுபடுதல் மற்றும் அதனைத் தடுத்தல் தொடர்பான சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி அவற்றைப் போன்று சிந்தனையில் தோன்றும் விடயங்களை சுவரொட்டியாக தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுமாறும் கூறி நேரம் ஒதுக்கப்பட்டது. இதன் போது ஆசிரியர்களும் வளவாளர்களும் சுவரொட்டிகளை மாணவர்கள் வரைவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆக்கிய சுவரொட்டிகளுடன் மாணவர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள், வளவாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வி.கி.கஸ்தனி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் செல்வி அமிர்தா ஆனந்தராசா அவர்களால் வளவாளர்களுக்கு நன்றி கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்லூடக அறைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களிற்கு கடல்வாழ் உயிரினங்கள், வளப்பாறைகள் தொடர்பான படங்கள், வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன.. அத்துடன் கைத்தொழில் புரட்சியால் ஏற்பட்ட சூழல் மாசுபாடு பற்றிய வீடியோக் காட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டு; விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதேச மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “கடற் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வில் காரை.இந்துவின் சுற்றாடல் முன்னோடிக் குழு மாணவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர்.”