WNPS (Wild Nature Protection Society) எனப்படும் வன ஜீவராசிகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகள் அழியாமல் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 35 பாடசாலைகளுள் காரை.இந்துவும் அயற்பாடசாலையான யாழ்ற்ரன் கல்லூரியும் உள்ளடங்குகின்றன. WNPS இனால் குறித்த விழிப்புணர்வுத் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வரிசையில் இச்செயற்திட்ட நிகழ்வானது காரை.இந்துவில் சென்ற 30-05-2019இல் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வானது கல்வி அமைச்சினூடாக WNPS இன் வடமாகாண இணைப்பாளர் திரு சுரேன் தம்பிராஜா அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்விற்கு NDB(National Development Bank) வங்கி அனுசரணை வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் WNPSஇன் இளைஞர் பிரிவின் தலைவர் திரு ஜெகன் அவர்கள், செயலாளர் செல்வி பரணி அவர்கள், வடமாகாண இணைப்பாளர் திரு த. சுரேன் அவர்கள், வளவாளராக WNPSஇன் உத்தியோகத்தர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும், NDB வங்கியின் உத்தியோகத்தர்களும் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் 100 சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
முதலாவது நிகழ்வாக பாடசாலை ஆசிரியர் திரு கு. சரவணபவானந்த சர்மா அவர்களின் வரவேற்புரை இடம்பெற்று பின்னர் இணைப்பாளர் திரு த. சுரேன் அவர்கள் இவ் அமைப்பின் 1894ல் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி சுருக்கமாக கூறியதுடன் இவ் வருடம் 125ஆம் ஆண்டை பூர்த்தி செய்யும் இச்சங்கத்தை சிறப்புற செய்யும் முகமாக பாடசாலைகளில் மேற்கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அதன் நோக்கம் என்பன பற்றிக் கூறியதுடன் இந்நிகழ்ச்சியின் அனுசரணையாளரான NDB வங்கி பற்றியும் கூறியிருந்தார். பின்னர் NDB வங்கியின் முகாமையாளர் அவர்கள் சேமிப்பதற்கான வழிகள் சேமிப்பதன் பயன்கள் பற்றியும் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக மாணவர்களுக்கு சிறிய விளக்கமும் அளித்திருந்தார். தொடர்ந்து வளவாளரான WNPS இன் உத்தியோகத்தர் விக்கினேஸ்வரன் அவர்கள், வன ஜீவராசிகள் மற்றும் எமது நாட்டிற்குரிய பறவையினங்கள் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டை நோக்கி வரும் பறவையினங்கள் ஆகியன பற்றியும் நமது நாட்டில் அருகி வரும் இனங்கள் பற்றியும், பாதுகாப்புப் பற்றியும் பருவ நிலை மாற்றம் அதன் பாதிப்புக்கள், இயற்கையைப் பாதுகாத்தல், சூழல் மாசடைவதைத் தவிர்த்தல், கடல் மாசடைவு, பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனைத் தடுப்பு, காடழிப்பு, பவளப் பாறைகளின் அழிவு போன்றன தொடர்பாக பல்லூடக எறியில் படங்கள், வீடியோக்கள் என்பவற்றின் உதவியுடன் விரிவான விளக்கவுரையாற்றியிருந்தார்.
காரை.இந்து, யாழ்ற்றரன் ஆகிய இரு பாடசாலைகளிலிருந்தும் சமூகமளித்திருந்த மாணவர்கள் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலை ரீதியான குழுக்களாக இருந்து தமது பிரதேசம் மற்றும் பாடசாலையின் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. இதன்போது மாணவர்கள் சூழல் தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டு அறிக்கைப்படுத்தினர்.
கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதைத் தொடர்ந்து நிகழ்வு நிறைவடைந்தது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வு காரை.இந்துவில் நடைபெற்றது.”