கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவா சங்க கனடா கிளையின் நிறுவுநர்களுள் ஒருவரும் அதன் ஆரம்பகால தலைவராகவும் பணிபுரிந்த அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் சமய சமூக கல்விப் பணிகள் பழைய மாணவர் சங்க கனடா கிளையின ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை தலைமையில்; 09-08-2014 அன்று Scarborough Civic Centre ல் நடைபெற்ற அன்னாரது முதலாவது ஆண்டு நினைவு வணக்கக் கூட்டத்தின்போது பலராலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டிருந்தன.
பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் காரைநகர் மக்கள் அன்னாரது குடும்ப உறவினர்கள் என அனைவராலும் கூட்ட மண்டபம் நிரம்பி வழிந்திருந்தமை அமரர் தம்பிராசா மாஸ்டர் தமது பணிகளாலும் உன்னதமான பண்புகளாலும் மக்கள் மனதில் நிலைத்து விளங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. லண்டனிலிருந்து வருகை தந்திருந்த கல்லூரியின் பழைய மாணவரும் தொழிலதிபருமான திரு.செல்லத்துரை ஜெயராசாவும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரது திருவுருவப் படத்திற்கு அன்னாரது துணைவியார் திருமதி மனோன்மணி தம்பிராசா சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த அனைவரும் வரிசையில் சென்று மலர் வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் தலைமையில் ஆன்ம சாந்தி வழிபாடு நடைபெற்றது.
சிவநாமத்தை அனைவரும் இணைந்து உச்சரித்தபோது அன்னாரது பேரன் செல்வன்.சங்கர் ஜெயச்சந்திரன் அன்னாரது திருவுருவப்படத்திற்கு சுடரொளி காட்டியதைத் தொடர்ந்து ஆன்மசாந்தி வழிபாடு நிறைவுற்றது. ஆத்மசாந்தி வழிபாட்டில் பாடப்பெற்ற விநாயகர் அகவல, சிவபுராணம திருமுறைகள், சிவயோக சுவாமிகளின் நமச்சிவாயப்பத்து ஆகியனவற்றையும் தன்னைப் பிள்ளையாரின் சிறப்புகளைக்கூறும் தன்னையமக அந்தாதி குறித்த சிறு கட்டுரையையும் உள்ளடக்கிய சிறிய மலர் அன்னாரது நினைவாக குடும்பத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது.
அகவணக்கத்தை அடுத்து ‘தாய்மலரடி பணிவோம்’ எனத் தொடங்கும் கல்லூரிப் பண் இசைக்கப்பட்டிருந்தது. தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை தமது தலைமையுரையில் அன்னாரின் பள்ளிக் கால நினைவுகளையும் அவரின் அபார ஞாபசக்தியினையும் காரைநகரின் ஒவ்வொரு குறிச்சியிலும் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் பரம்பரை உறவுகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தார் என்றும் கூறினார். அத்துடன் காரைநகரில் கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு அவர் எடுத்த முயற்சி, தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையை நிறுவுவதற்கு அவரின் உறுதியான தெளிவான நிலைப்பாடு என்பனவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.
பாடசாலையின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி வாசுகி; தவபாலன் அனுப்பியிருந்த செய்தியினை சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் வாசித்தார்.
சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி தி.சிவகுமாரன் ஒன்ராரியோ இந்து சமய பேரவைச் செயலாளர் திரு.சிவ.முத்துலிங்கம் ஆதிஅருள்நெறி மன்ற நிறுவுநர் பல்மருத்துவ கலாநிதி. ஆதிகணபதி சோமசுந்தரம் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயலாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் முன்னாள் ஆசிரியர் திரு.சங்கரப்பிள்ளை அப்பாப்பிள்ளை karaihinducanada இணையத்தள நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அமரர் தம்பிராசா மாஸ்டரின் புதல்வர் கலாநிதி ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவு வணக்க உரைகளை ஆற்றியிருந்தனர்.
பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும தற்போதய நிர்வாக உறுப்பினருமான திரு.தம்பையா அம்பிகைபாகன் சமூகமளிக்கமுடியாத சூழ்நிலையில் அவரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த செய்தியினை சங்கத்தின் பொருளாளர் திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் வாசித்தார். சங்கத்தின் உதவிச் செயலாளர் திருமதி செல்வஇந்திராணி சித்திரவடிவேல் நன்றியுரை கூறியதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “அமரர் தம்பிராசா மாஸ்டரின் பணிகள் முதலாவது ஆண்டு நினைவு வணக்கக் கூட்டத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டன”