காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தபசாரமும், ‘நதி’ சஞ்சகையின் வெளியீடும் சென்ற 18-06-2019 செவ்வாய்க்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் ஒன்றியத்தின் பொறுப்பாசிரியர்களான திரு.இராசரத்தினம் ஜீவராஜ், திருமதி சிவாஜினி லக்ஸ்மன் ஆகியோரின் உதவியுடனும் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகள் ஒன்றியத்தின் தலைவரான செல்வன் பரமானந்தம் சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த இலங்கை வங்கியின் காரைநகர்க் கிளை முகாமையாளரான திரு.வேலுப்பிள்ளை புவனேந்திரராஜா உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வெளியீடான ‘நதி’ சஞ்சிகையின் முதற் பிரதியை கல்லூரி அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டு வெளியிட்டு வைத்திருந்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியையும், ஓய்வுநிலை அதிபருமாகிய திருமதி விமலாதேவி விசுவநாதன் சிறப்புப் பிரதிகளை வழங்கிவைத்தார். கல்லூரியின் ஆசிரியையான திருமதி சிவரூபி சிவரங்கன் வெளியீட்டுரையினை நிகழ்த்தியிருந்தார்.
பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் ஆகிய இருவரும் பொன்னாடை அணிவித்தும் நினைவுக் கேடயம் வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர். சிறப்பாக, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்கள் அண்மையில் அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளமையை முன்னிட்டு அவரால் காரை இந்துவிற்கு வழங்கப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியப் பணி உள்ளிட்ட கால் நூற்றாண்டு கால ஆசிரியப் பணியினைப் பாராட்டி கல்லூரிச் சமூகத்தின் சார்பில் மதிப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுகளில் காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.ஏ. குமரேசமூர்த்தி அவர்களும் அயற்பாடசாலைகளான யாழ்ற்ரன் கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி; ஆகியவற்றின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “வெகு சிறப்பாக நடைபெற்ற உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் விருந்துபசாரமும் ‘நதி’ சஞ்சிகை வெளியீடும்”