கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி சென்ற சனிக்கிழமை (23-08-2014) அன்று கனடா கந்தசுவாமி கோவில் கலை அரங்கில் கர்நாடக இசை ரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிப்போட்ட வெற்றி நிகழ்வாக நடந்தேறியது.
தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த தமிழீழம் தந்த இசைக் கலைஞர் கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமன் அவர்களின் இன்னிசைக் கச்சேரிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைவேந்தன் முல்லைவாசல் ஸ்ரீ.G.சந்திரமௌலி அவர்களும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ கிரிதரன் சச்சிதானந்தன் அவர்களும் இசைக்கலைமணி திருமதி.குலநாயகி விவேகானந்தன் அவர்களின் மாணவி செல்வி பிரியங்கா கிருஷ்ணதாசன் அவர்கள் தம்புரா இசைத்தும் அணிசெய்திருந்தனர்.
கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் குழந்தைகள் மருத்துவ நிபுணருமான மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம், பழைய மாணவரும் தொழிலதிபருமான திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன், வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா ஆகியோர் நிகழ்விற்கு தமது நிதி அநுசரணையை வழங்கியிருந்தனர்.
கல்லூரியின் சிறப்பு மிக்க பழைய மாணவர்களான மக்மாஸ்ரர் பல்கலைக் கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி.தி.சிவகுமாரன், கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவரும் எமது சங்கத்தின் போசகருமான சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம், குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் மகாதேவன் இசை ஆசிரியைகளான இசைக்கலைமணி திருமதி.சாந்தினி வர்மன், இசைக்கலைமணி திருமதி.குலநாயகி விவேகானந்தன், கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் தலைவர்களான திரு.சண்முகம் கந்தசாமி, திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம், திரு.ரவி ரவீந்திரன் உட்பட்ட கர்நாடக இசை ரசிகர்கள் பலநூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் வருகை தந்து கச்சேரி மண்டபத்தை நிரப்பியிருந்தனர்.
முன்னாள் பிரபல ஆசிரியரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவரும் எமது சங்கத்தின் போசகருமான சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் முன்னாள் கணக்காளரும் முன்னாள் பிரபல ஆசிரியருமாகிய திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக உறுப்பினருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் ஆகியோர் நிகழ்வினை மங்கல விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
கனடாப் பண் தமிழ் பண் ஆகியவற்றை இன்னிசை வேந்தர் சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிகளான செல்வி டக்ஷனா ஞானகாந்தன், செல்வி கோசலா ஞானகாந்தன் ஆகியோர் பண்ணோடு இசைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.
கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் தந்த வாய்ப்பாட்டுக் கலைஞருமான அமரர் சங்கீதபூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் குரலில் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கல்லூரிப் பண் இசைக்கப்பட்டது.
நிகழ்வினை தொடக்கி வைத்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை உரையாற்றினார். அவர் தனது உரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட எமது சங்கம் அரச உதவி பெறமுடியாத கல்விச் செயற்பாடுகளுக்கு நன்கொடையாளர்களின் ஆதரவுடன் உதவி வருவதாகவும் இவ்வாண்டு ஒரு மாற்றத்திற்காக இந்த இன்னிசைக் கச்சேரியை ஒழுங்கு செய்ததாகவும் எமக்கு கல்வியறிவு ஊட்டிய எமது கல்லூரி அன்னைக்கு உதவவேண்டியது எமது எல்லோரினதும் கடமை எனவும் கூறினார்.
அடுத்து வந்த இரு மணிநேரத்திற்கு கலைமாமணி திருமதி.பூஷணி கல்யாணராமனின் கரைபுரண்டோடும் கர்நாடக இசை வெள்ளத்திற்காக அரங்கம் விரிந்தது. ஆவலோடு தமது இருக்கைகளில் நிமிர்ந்து இருந்த ரசிகர்கள் தம்மை மறந்து தாளம் போட்டு இசையரசியின் இசைக் கோலங்களை ரசித்தனர். ஒவ்வொரு உருப்படியும் பாடத் தொடங்கும் போதும் முடியும்போதும் கலைமாமணி அவர்கள் கற்பனாஸ்வரத்தை ஆலாபனை செய்தபோதும் அரங்கத்தில் ரசிகர்களின் கரவொலி எதிரொலித்தது.
‘புண்ணியம் செய் மனமே’ என்ற பொருள் பொதிந்த பாடலைப் பாடிய போதும், ‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய போதும் சபையோர் மெய்மறந்து உறைந்து போனபின் உற்சாகப்படுத்திய கரவொலியில் அரங்கு நிறைந்தது.
பக்கவாத்தியக் கலைஞர்களும் தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தம்பங்கை நிரூபித்தனர். வயலின் இசைவேந்தன் முல்லைவாசல் ஸ்ரீ.G.சந்திரமௌலி அவர்களும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ கிரிதரன் சச்சிதானந்தன் அவர்களும் தனியாவர்த்தனம் வாசித்தபோது மண்டபம் இசைப் பிரவாகத்தில் மூழ்கித் திணறியது.
எல்லாவற்றிற்கும் மேலாக கச்சேரியின் இறுதியில் அறிவிப்பாளர் ஞானபண்டிதன் இந்த அருமையான இன்னிசைக் கச்சேரி பற்றிக் கூறுவதற்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்று கூறியபோது சபையோர் அனைவரும் எழுந்து நின்று தமது கரவொலியை வழங்கி நிறைவான மகிழ்ச்சியையும் மரியாதையையும் அரங்க நாயகி கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமன் அவர்;களுக்குத் தெரிவித்தனர்.
அடுத்து கலைமாமணி திருமதி.பூஷணி கல்யாணராமன் அவர்களை கல்லூரியின் சிறப்புமிகக் பழைய மாணவர் பேராசிரியர் தி.சிவகுமாரன் அவர்களின் பாரியார் திருமதி.ஜெயநாயகி சிவகுமாரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். வயலின் இசை வேந்தன் முல்லைவாசல் ஸ்ரீ.G.சந்திரமௌலி அவர்களை கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் நிகழ்வின் அநுசரணையாளருமான குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ கிரிதரன் சச்சிதானந்தன் அவர்களை பழைய மாணவரும் நிகழ்வின் அநுசரணையாளருமான தொழலதிபர் திரு.பா.மகாதேவன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தம்புரா வாசித்த செல்வி.பிரியங்கா கிருஷ்ணதாசன் அவர்களை கல்லூரியின் பழையமாணவரும் கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் தலைவர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்களின் பாரியாரும் கல்லூரியின் பழைய மாணவியும் மாணவ முதல்வருமான திருமதி.கமலாதேவி இராசேந்திரம் பாராட்டுப்பரிசு வழங்கிக் கௌரவித்தார்.
நிறைவாக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் இசையை முறைப்படி பயின்றவரும் இசைப்பிரியருமான எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலத்தில் எம்கல்லூரியில் பிரபல இசை ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு இசைத்துறையை நன்கு விருத்தி செய்து பல இசைக் கலைஞர்கள் எம் கல்லூரி அன்னையின் அரவணைப்பில் வளர வித்திட்டார் எனவும் குறிப்பிட்டார். அத்தகைய பின்னணியில் இன்று எம்கல்லூரி மேம்பாட்டுக்காக இசைஉலகில் பிரகாசித்து பிறந்த மண்ணுக்கும் புகுந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துவரும் கலைமாமணி திருமதி.பூஷணி கல்யாணராமன் அவர்களின் இன்னிசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தமை தமக்கு பூரிப்பை அளிப்பதாகவும் இக்கச்சேரியை ஏற்பாடு செய்வதற்கும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கும் எமது சங்கத்திற்கு உதவிய அனைத்து உள்ளங்களையும் தவறாமல் குறிப்பிட்டு அவர்களுக்கு தமது மனப்பூர்வமான நன்றியை சங்கத்தின் சார்பில் தெரிவித்தார்.
கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல அறிவிப்பாளருமான திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் கர்நாடக இசையை நன்கு ரசித்து அறிந்தவராக கலைநயத்தோடு கச்சிதமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.
இனிமைiயான இசைக் கச்சேரியை பொறுமையாக இருந்து ரசித்து மகிழ்ந்ததோடு காரைநகரின் கல்விப்பாரம்பரியத்திற்கு வித்திட்ட புகழ்பூத்த கல்லூரியின் மேம்மாட்டிற்கு உதவிய நிறைவோடு சபையோர் மண்டபத்தை விட்டு மெதுவாக கலைந்து சென்றனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.
No Responses to “இசை ரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிப்போட்ட கலைமாமணி பூஷணி கல்யாணராமன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி”