காரை.இந்துவின் ‘வருடாந்த பரிசளிப்பு தின விழா’வினை நடாத்துவதற்கு நிரந்தரமாக உதவும்வகையில் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ கல்லூரியின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தினை தோற்றுவித்திருந்தது மட்டுமல்லாது கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பல தடங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிதியத்தினுடாகப் பெறப்படும் பணத்தில், பரிசளிப்பு விழாவிற்கு ஏற்படக்கூடிய செலவுகளைத் தவிர்த்து, மீதமாகவுள்ள தொகையினை கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என இந்நிதியத்தின் சட்ட ஆவணத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரும், காரை.இந்து அன்னையின் உத்தமமான பழைய மாணவனுமாகிய குழந்தைகள் மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் இந்து அன்னை வளம்பெறவேண்டும் என்கின்ற உளார்த்தபூர்வமான சிந்தனையுடன் வேறு பலவகையிலும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஊடாக பேருதவி புரிந்து வருபவர். மேற்சொல்லப்பட்ட ஏற்பாடுகள் இவரது விருப்பத்திற்கும் அறிவுறுத்தலுக்கும் அமையவே சட்ட ஆவணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே கல்லூரிக்கு மேலும் உதவி செய்யஎண்ணியவராக மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள், நம்பிக்கை நிதியத்தின் வைப்புத் தொகையினை அதிகரிக்கும்வகையில் தொடர்ந்து வைப்பிலிட்டு வந்துள்ளதன் மூலம் நம்பிக்கை நிதியம் இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் மேலதிகமாகப் பெறப்படும் நிதியிலிருந்து கல்லூரியின் மற்றுமோர் முக்கிய நிகழ்வான வருடாந்த மெய்வல்லுநர் போட்டியையும் தொடர்ந்து நடாத்துவதென கல்லூரிச் சமூகம் தீர்மானித்ததன் அடிப்படையில் இப்போட்டியானது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் இவ்வாண்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் சென்ற வாரம் மீண்டும் ஐந்து இலட்சம் ரூபாவினை இந்நிதியத்தில் வைப்பிலிட்டதன் மூலம் நம்பிக்கை நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை மூன்று மில்லியன் ரூபாவாக தற்போது அதிகரித்துள்ளது. இதன்மூலம் கல்லூரியின் மேலும் சில முக்கியமான தேவைகளுக்கு உதவக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்நிதியத்தினை நிறுவிய மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களுக்கு கல்லூரிச் சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் மீண்டும் பாராட்டி உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றது. இதேவேளை இந்நிதியத்தினை வெற்றிகரமாக நிறுவுவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஒத்துழைப்பினை வழங்கியது என்ற வகையில் மகிழ்ச்சியும் பெருமிதமுமடைகின்றது.
04-07-2014ஆம் திகதி அன்று ‘மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டவேளை இந்நிதியம் குறித்து நிகழ்த்தப்பட்டிருந்த அறிமுக உரையினை இத்தருணத்தில் மீளப்பிரசுரித்தல் பொருத்தம் உடையதாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு அது கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
No Responses to “மூன்று மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள ‘மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’.”