கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இசை ஓவியம் ஆகிய பாடங்களின் அபிவிருத்திக்கான உதவித் திட்டம் தமது மறைந்த குடும்ப உறுப்பினர்களான அமரர் பொன்னம்பலம் அன்பழகன் அமரர் பொன்னம்பலம் அருளழகன் ஆகியோரது நினைவாக ஐம்பதினாயிரம் ரூபாவினை வழங்கி திரு.பொன்னம்பலம் குடும்பத்தினரால் சென்ற ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு உதவ முன்வந்த திரு.பொன்னம்பலம் குடும்பத்தால் இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட உதவு தொகையாக ஐம்பத்தொராயிரம்; ரூபா (ரூபா51000.00) தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர்களாகவிருந்த அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஆகியோர் அழகியற் பாடங்களான ஓவியம் இசை ஆகியவற்றை முறையே ஆர்வமுடன் பயின்று வந்ததுடன் இவ்விரு பாடங்களிலும் கல்லூரியின் முன்னிலை மாணவர்களாக விளங்கி சாதனை புரிந்து வந்துள்ளனர். இவர்களிருவரதும் தந்தையாரான திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் பிரபல முன்னாள் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியிருந்தவர் என்பதுடன் பழைய மாணவர் சங்க கனடா கிளையில் உறுப்பினராகவிருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருபவர். இவரது புதல்வியும் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்ததுடன் அதன் வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றவருமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் மற்றும் புதல்வன் திரு பொன்னம்பலம் வெற்றிவேல் ஆகியோரும் குறித்த உதவித் திட்டத்திற்கான உதவித்தொகையினை தமது பெற்றோர் திரு.திருமதி பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து வழங்கி வருகின்றனர்.
கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் அழகியல் கற்கை நெறிகளின் மேம்பாட்டிற்காக சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கி வைக்கப்பட்டிருந்த அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஞாபகார்த்த உதவித்திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஐம்பதினாயிரம் ரூபாவும் பயன்படுத்தப்பட்டு அதற்கான செலவு விபரங்கள் பழைய மாணவர் சங்க கனடா கிளையூடாக தாய்ச சங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அழகியல் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்ற அறைகளிற்கு மின்னிணைப்பு செய்வதற்கும் இவ்வறைகளிற்கு வர்ணம் தீட்டுவதற்கும் வயலின் மிருதங்கம் டொல்கி கார்மோனியம் ஆகிய இசைப் பாடத்திற்கான உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் குறித்த ஐம்பதினாயிரம் ரூபாவும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த பல தசாப்தங்களாக பிரபல்யம் மிக்க கர்நாடக இசைக்கலைஞர்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக விளங்கிவரும் தனித்துவம் மிக்க இக்கல்லூரியானது அண்மைக்காலம்வரை தொடர்ந்து அத்தகைய நிலையினை பேணிவரும ;நிலையில் அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் நினைவுத் திட்டத்திற்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையூடாக திரு.பொன்னம்பலம் குடும்பத்தினர் வழங்கி வரும் உதவியானது மிகுந்த பயனுடையதாக அமைந்துள்ளமை குறித்து பாடசாலைச் சமூகம் நன்றியுணர்வுடன் கூடிய மகிழ்ச்சியினையும் பாராட்டினையும் திரு.பொன்னம்பலம் குடும்பத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.
No Responses to “கல்லூரியின் அழகியல் பாடங்களின் அபிவிருத்திக்கான அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஞாபகார்த்த உதவித்திட்டத்திற்கு இவ்வாண்டிற்கான உதவுதொகை ஐம்பதினாயிரம் ரூபா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது”