காரை.இந்துவின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 04-07-2019 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவின் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் திரு.வேலுப்பிள்ளை தவராசா அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(கல்வி நிர்வாகம்) திருமதி நிறைஜா மயூரதாஸன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை கௌரவ விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்கள் நிறுவுநர் தின நினைவுப் பேருரையினை நிகழ்த்தவுள்ளார்.
‘மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின்’ அனுசரணையில் இவ்விழா 5வது ஆண்டாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசளிப்பு விழாவினைச் சிறப்பிக்கவுள்ள கல்லூரியின் பழைய மாணவனான திரு.வேலுப்பிள்ளை தவராசா தற்போது குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றுபவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானத்துறைப் பட்டதாரியான இவர், ஸ்ரீலங்கா நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்திபெற்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உதவிச் செயலாளராக 2014ஆம் ஆண்டில் நியமனம்பெற்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளராக இவ்வாண்டு முதல் பணிமாற்றம் பெறும்வரை கடமையாற்றியிருந்தவர்.; காரை.இந்துவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறைகொண்டுள்ள திரு.தவராசா கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தில் அங்கம்வகித்து சங்கத்தின் செயற்பாடுகளில் முனைப்போடு செயலாற்றிய அதேவேளை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உருவாக்கம் பெற்றதில் தாய்ச் சங்கத்தின் சார்பில் இவர் வழங்கியிருந்த பங்களிப்பும், ஒத்துழைப்பும் பாராட்டப்படக் கூடியனவாகும் என்பதுடன் கல்லூயின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் பிரதிபலிப்பனவாகும்.
நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவினதும் அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும்.”