எமது கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவரும், எம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று அறிவுப் பெட்டகமும் ஆகிய தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் 99 ஆவது அகவையில் கால் பதிக்கும் இவ்வேளையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் குருக்கள் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகின்றது.
நன்றும்நீ தமிழ்ததாயை நெஞ்சி ருத்தி
நாளெலாம் அவள்பணியை நயந்து செய்வாய்
ஒன்றல்ல இரண்டல்ல பலவேயாகும்
உத்தமநீ பதிப்பித்த நூல்கள் நீளும்
குன்றாத அன்புடையாய் குருவே ஐயா
கூறுகின்ற கருணையுன்றன் பாலே காண்போம்
என்றும்நீ இளமையுடன் இருக்க வேண்டி
இறைதாளைத் தொழுகின்றோம் வாழி வாழி
நன்றி: வைத்தீசுவரர் மலர்-2001
தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் எண்பத்தைந்து அகவை நிறைவெய்தியதை முன்னிட்டு அவர்களின் பணிகளைப் பாராட்டி எமது கல்லூரியின் பழைய மாணவரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவருமாகிய சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ‘வைத்தீசுவரர் மலர்’ கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கனடாவில் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் மணிவாசகர் சபை குருக்கள் ஐயாவை வாழ்த்தி அண்மையில் வெளியிட்ட சேவை நயப்புரையை இங்கே பார்வையிடலாம்.
99 ஆம் அகவையில் கால்பதிக்கும் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் சேவை நயப்புரை
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை
தலைவர்
காரைநகர் மணிவாசகர் சபை
‘தங்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரடிகளின் வாக்கிற்கேற்ப தம் வாழ்நாள் முழுவதும் சிவத்தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்களாவார். 2014 புரட்டாதித்திங்கள் 22 ஆம் நாளில் 99 ஆவது அகவையில் கால்பதிக்கும் நன்னாளில் அவர் ஆற்றி வந்த பணிகளை சேவைநலன்களைப் பாராட்டுவதும் போற்றுவதும் சாலச்சிறந்த கடமையாகும்.
குருக்கள் ஐயா அவர்கள் கற்றறிந்த பேராளன,; .ஆசாரம், ஒழுக்கம், பேச்சுவன்மை, எடுத்த காரியத்தை திறமையாக முடிக்கும் திறன், விடாமுயற்சி ஆகிய அருந்திறன்கள் நிறையப்பெற்ற அந்தணப் பெருமகனாவார்.
எளிமையான தோற்றம், எல்லோருடனும் இனிமையாகப் பழகும் சுபாவமும், மாரிபோல் பிரதி பலன்பாராது உதவும் தன்மைப் பண்புகளுடன் வாழ்ந்து வரும் செம்மலாவர். இவர் வளரும் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் உதாரண புருஷராகவும் விளங்குகிறார்.
பணம் நாட்டம் சிறிதுமின்றி ‘செல்வன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்’ எனக் கருதி ஈழத்து சிதம்பரக் கூத்தனை சிந்தையில் இருத்தி, சிந்தை நிறைவோடு மகிழ்ந்திருக்கும் மாமனிதராவார்.
அறுபத்து நான்கு ஆண்டுகளாக ஈழத்துச்சிதம்பரக்கூத்தருக்கு முப்பொழுதும் திருமேனி தீண்டி பூசை வழிபாடு செய்து வந்த சிவ ஸ்ரீ கணபதிசுவரக்குருக்கள் அவர்களுக்கும் சிவயோக சுந்தராம்பாள் அவர்களுக்கும் புத்திரனாக 22.09.1916 ஆம் ஆண்டு பிறந்தார். கணபதிசுவரக்குருக்கள் இலங்கைச் சைவ சமயக்குருமார் சபையில் 14 ஆண்டுகள் தலைவராக கடமையாற்றிய பெருந்தகைமையாளராவார்.
வைத்தீசுவரக்குருக்கள் தமது ஆரம்பக் கல்வியைத் தந்தையாரிடமும் பண்டிதர் பஞ்சாட்சர குருக்களிடமும் பண்டிதர்.சி. சுப்பிரமணிய தேசியரிடம் கற்றுத் தேறினார். வேத விசாரத் பிரம்ம ஸ்ரீ பி.வி.சிதம்பர சாஸ்தியாரிடமும் சமஸ்கிருதக் கல்வியையும் வித்துவ சிரோன் மணி பிரம்மஸ்ரீ இ.கணேசையாவிடம் தமிழ் மொழியை கசடறக் கற்றார். தமிழ் பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். ஆசியராகவும் பண்டிதராகவும் அதிபராகவும் பணியாற்றினார்.
திருவாசகத் தேனை எல்லோரும் பருகி துய்க்க வேண்டுமென்பதற்காக காரைநகர் மணிவாசக சபையை உருவாக்கி திருவெம்பாவைக்காலத்தில் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தில் ஆண்டுதோறும் மணிவாசகர் விழாவை சிறப்பாக நடத்தி வந்தவராவார். மணிவாசகசபை எழுபத்தைந்து ஆண்டுகள் தளர்வு இன்றி செயலாற்றி வருகிறது. இச்சபையின் காப்பாளராக இருந்து இன்றுவரை வழிநடத்திச் செல்லும் பணி பெருமைக்குரிய விடயமாகும். மேலும் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ 1960 ஆம் ஆண்டு காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகத்தை ஆரம்பித்தார். மாணவர்களுக்கு துணை நூல்கள் பலவற்றை எழுதியதோடு க.பொ.த(சாதாரண) மாணவர்களுக்கு தமிழ், சமய வினாத்தாள்களை மாதம் தோறும் வெளியீடு செய்தும் வந்துள்ளார். கனடாவில் இயங்கி வரும் சைவ சித்தாந்த மன்றத்தின் காப்பாளராகவும் கனடாவில் வெளிவரும் அன்புநெறி என்னும் மாத இதழின் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றார்.
இவர் ஈழத்துச் சிதம்பர புராணச் சுருக்கம், காரைநகரில் சைவசமய வளர்ச்சி, உரைநடையாக்கம், பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு எனப்பல நூல்களை ஆக்கியுள்ளார்.
காரைநகர் சைவமகா சபை பொன்விழாமலர், காரைநகர் மணிவாசகர் சபை பொன்விழாமலர், திருவாதிரை மலர்கள, காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் கும்பாபிஷேக மலர், ஆகியவற்றின் மலராசியராக பணிபுரிந்து பெருமை பெற்றவராவர்.
ஈழத்துச் சிதம்பரத்தின் தலபுராணமாக விளங்கும் ஈழத்துச் சிதம்பரபுராணம், ஆண்டிகேணி ஐயனார் புராணம் ஆகிய இரு நூல்களை எழுதிவித்துப் பதிப்பித்த பெருமை இவரைச்சாரும. மேலும் திண்ணபுர அந்தாதி, திருமுறைப் பெருமை, நாவலர் பிள்ளைத்தமிழ், நன்னூற்காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், திக்கை அந்தாதி, சேஷத்திர திருவெண்பா – 11ம் திருமுறை, சீறாப்புராணம் நபி அவதாரப் படலம், ஈழத்துச் சிதம்பரம் ஆகிய அரிய பெரிய நூல்கள் அழிந்து போகாமலும் இன்றைய தேவை கருதியும் பதிப்பித்தவராவர்.
திருவாச ஆராய்ச்சியுரை, பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை எழுதிய பண்டிதமணி சு.அருளம்பலவாணர் அவர்களை கௌரவித்து ‘சங்கநூற் செல்வர்’ என்னும் விருது வழங்கவும் காரைநகர் மான்மியம் ஆக்கிய வித்துவான் கு.ஓ.ஊ நடராசா அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பிக்கவும். மணிவாசகர் விழாவுக்கு வருடந்தோறும் வருகை தந்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு ‘சிவத்தமிழ்ச் செல்வி’ என்னும் பட்டம் வழங்குவதற்கும் மூலகாரணமாக இருந்தவர் குருக்கள் ஐயா அவர்களே.
குருக்கள் ஜயா அவர்கள் தாம் அரிதின் முயன்று சேகரித்து கற்று உணர்ந்த நூல்களை, வேதாகம ஏட்டுச் சுவடிகளை, பெறுதற்கரிய நூல்களை, பல இலட்சம் பெறுமதியான நூல்களை, தமது தந்தையாரின் நினைவாக உதித்த கணபதிசுவரக்குருக்கள் நூலகத்திற்கு வழங்கிய பெரிய அறக்கொடையாளராவர்.
தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த பல தசாப்தங்களாக பணியாற்றி வரும் குருக்கள் அவர்களை அகில இலங்கை கம்பன் கழகம் (1995) ‘மூதறிஞர்’ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. கனடா சைவ சித்தாந்த மன்றம் ‘சிவத்தமிழ் வித்தகர்’ என்னும் பட்டத்தை வழங்கி சிறப்புச் செய்துள்ளது யாழ்.பல்கலைக்கழகம் இவரின் அரிய சேவையை கருத்தில் கொண்டு ‘தத்துவக் கலாநிதி’ என்னும் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது 2001ல் எண்பத்தைந்து அகவை நிறைவெய்தும் வேளையில் அவர் சேவை நலன் பாராட்டி ‘வைத்தீசுவரர் மலர்’ என்னும் சஞ்சிகையை சைவ சித்தாந்த மன்றம் வெளியீடு செய்து அவரின் பெருமையை உலகறியச் செய்துள்ளது.
தள்ளாத வயதிலும் தளராத உள்ளத்தோடும் பணி செய்யும் குருக்கள் ஜயா அவர்கள் நீடுழி காலம் நோய் நொடியின்றி வாழ மேலும் பல பணிகள் ஆற்ற ஈழத்துச் சிதம்பர சிவகாமி சமேத நடராசப் பெருமானின் திருப்பாதங்களை வணங்கி வாழ்த்தி அமைகின்றேன்.
No Responses to “99 ஆவது அகவையில் கால்பதிக்கும் தத்துவக் கலாநிதி சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்தி வணங்குகின்றது”