Teachers Day 2014 – Theme – INVEST IN THE FUTURE – INVEST IN TEACHERS
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தால் (UNESCO) சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் (ILO) ஒத்துழைப்புடன் 1966ம் ஆண்டு பாரிஸ் நகரில் அரசாங்கங்களுக்குக்கிடையே ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட மகாநாட்டில் ‘ஆசிரியர்களின் அந்தஸ்து’ (Status of teachers) தொடர்பான முன் மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தால் அக்டோபர் 5ம் திகதி ஆசிரியர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆசிரியர்களின் உரிமைகள், பொறுப்புக்கள் ஆரம்ப நிலையில் தயார்ப்படுத்தல், பணியில் இணைத்துக் கொள்ளல, தொழில் நிலைமைகள், தொடர்கல்வி, கற்றல், கற்பித்தல் நிலைமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியான நியமங்கள் அமைதல் வேண்டும் என மேற்படி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி தொடர்பான தீர்மானங்கள், கல்விக் கொள்கைகள் வகுக்கப்படும் பொழுதும், ஆசிரியர்கள் தொடர்பான தீர்மானங்கள் எட்டப்படும் நிலைகளிலும் கல்விக்குப் பொறுப்பானவர்கள் ஆசிரியர்களுடன் கலந்தாலோசனையும் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். என மேற்படி சிபார்சுகளில் கூறப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்கப்படுவதற்கு ஆசிரியர்களின் அந்தஸ்து உயர்த்தப்படுவதற்கு மேற்படி சிபார்சுகளில் சிறப்பான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
உலகின் சில பாகங்களில் சமூகத்தின் முக்கியமான, உறுதிமிக்க, காத்திரமான பங்களிப்பினை கல்விக்கும் அபிவிருத்திக்கும் வழங்கும் ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதில்லை.
சமூகம் ஆசிரியர்களின் மகத்தான பணியைப் புரிந்து கொள்வதற்கும், பாராட்டுவதற்கும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அக்டோபர் 5ம் திகதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அர்ப்பணிப்பு மிக்க தனித்துவமான முக்கியமான வகிபாகத்தை சமூகத்தில் ஆசிரியர்கள் வகிப்பதனால் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் மட்டுமன்றி சமூகம் வருடம் பூராகவும் ஆதரவு வழங்க வேண்டும்.
பூகோள கட்டமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப தேவைப்படும் வலுவான, சக்திமிக்க, எதிர்கால சந்ததியினரை தொடர்ந்தும் உருவாக்குவதை உறுதி செய்யவும் ஆசிரியர் பணியை இலகுபடுத்தவும், ஆசிரியர் பணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தவும் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் வழி செய்ய வேண்டும்.
அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதற்கான திறவு கோல்கள் ஆசிரியர்களின் கரங்களில் தான்; உண்டு. ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி, புதியவனவற்றை புகுத்தி, சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பொறுப்பு மிக்க குடிமக்களை உலகத்திற்கு வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆசிரியர்கள் தினந்தோறும் சமூகம் வேண்டி நிற்கும் சிறந்த சமூகத்தை செதுக்கும் சிற்பிகள்.
வாண்மை விருத்தி மிக்க, ஆதரவு வழங்கப்பட்ட, பொறுப்பு மிக்க, (Responsible) வகை கூறும் (Accountability) கடப்பாடு மிக்க ஆசிரியர்களால் தான் சிறந்த கல்வியை வழங்கமுடியும். மேலே சொல்லப்பட்ட குணநலன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களால் வழங்கப்படும் கல்வியே நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியையும் சமாதானத்தினையும் உருவாக்கக்கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.
சீர்தூக்கிப் பார்க்கின் எதிர்கால சந்ததியினரைக் கற்பிக்கும் பொறுப்பானது எவ் வகையிலும் இலகுவான காரியமன்று. சிறந்த ஆசிரியருக்கு மாற்றீடாக எதுவும் இருக்கமுடியாது. ஆசிரியர்கள் தலைமுறையின் அமைதியான வழிகாட்டிகள் (Silent Guide) எனக் கருதப்படுகின்றார்கள்.
சர்வதேச கல்வியகத்தில் (Education International) அங்கத்துவம் பெற்றுள்;ள 401 அங்கத்தவ அமைப்புக்கள் உலகளாவிய ரீதியில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
சர்வதேச கல்வியகம் (E.I) ஆசிரியர்களின் பணியை உள்ளுர் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரவும் பொது மக்களிடையே விழிப்புணர்வைக் வெளிக் கொணரவும் ஆசிரியர் தினம் சந்தர்ப்பமாக அமையும் எனக் கருதுகின்றது.
உலகளாவிய ரீதியில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் பல்வேறு வழிமுறைகளில் அமைகின்றது. மலர் மாலைகள் அணிவித்து கௌரவித்தல். மலர் செண்டுகள், வாழ்த்து மடல்கள், நினைவுக் கேடயங்கள். அன்பளிப்பு வழங்கல், பாராட்டுக் கூட்டங்கள் , நடத்துதல் எனப் பலவகைப்படும். சில நாடுகளில் ஆசிரியர் தினம் புகழ் பெற்ற கல்வியாளர்கள் அல்லது கல்விசார் பெருமையுடையவர்கள் நல்கிய பங்களிப்பினை குறிப்பிடுவதாக ஆசிரியர் தினம் அமைகின்றது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த தத்துவ ஞானி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஸ்ணன் குடியரசுத் தலைவரானவுடன் அவரின் நண்பர்கள் அவரின் பிறந்த தினமான செப்டெம்பர் 5ம்திகதியைக் கொண்டாட வேண்டிய பொழுது அவர் இத்தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அதனைத் தான் பெருமையாகவும் பேறாகவும் (Proud & Privilege) கருதுவதாகத் தெரிவித்து ஆசிரியர் தினமாகக் கொண்டாடும்படி வேண்டினார். அதற்கேற்ப 1965ம் ஆண்டிலிருந்து இந்திய தேசம் முழுவதும் செப்டெம்பர் 5ம் திகதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி அனைத்து இந்திய ஆசிரியர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் ஆசிரியர் தினத்துக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஆசிரியர்த் தொழில் அறிவை வழங்குவதற்காக (Enlighten) ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புமிக்க (Divine Responsibility) பணி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
மானம் அறம் கல்வி மாண்புகள் யாவையும்
தானமாய்த் தருபவர் ஆசிரியர்
இந் நன்நாளில் ஆசிரியர்கள் அனைவரும் நல்லன பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
No Responses to “இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னைநாள் தொழிற் சங்க அலுவலர் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் போசகருமான திரு. எஸ்.கே. சதாசிவம் அவர்களின் ஆசிரிய தினச் செய்தி”