1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தினால் (UNESCO) ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஆசிரியர்கள் பல்வேறு வழிகளில் மதிப்பளிக்கப்பட்டு அவர்களது சமூகத்திற்கான அர்ப்பணிப்பும் மகத்துவம் மிக்கதுமான சேவை நன்றியுணர்வுடன் நினைவு கூரப்பட்டுவருகின்றது..
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் சென்ற திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டிலும் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கல்லூரி ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
இக்கொண்டாட்டத்திற்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நாற்பதாயிரம் ரூபாவினை வழங்கி உதவியிருந்தது. ஆசிரியர்களின் சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு ஆதரவளிக்க வேண்டும் என பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது தெரிவித்திருந்த ஆலோசனையை உள்வாங்கிக்கொண்டே ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் கருதி அனுசரணை வழங்குவதென சங்க நிர்வாகம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் சு.டனோஜன் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியரும் ஓய்வு நிலை அதிபருமாகிய பண்டிதர் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
பிரதம விருந்தினர் அதிபர் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.நிமலதாசன்; கணபதிப்பிள்ளை மாணவர் முதல்வர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து செல்வி ச.வித்தியா வழங்கிய வரவேற்பு நடனம் அனைவரையும் மகிழவைத்து வரவேற்பதாக அமைந்திருந்தது.
தொடர்ந்து ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்ட பின்னர் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களினால் தனித்தனியாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கபட்டதுடன் சுவர்க்கடிகாரங்களை அன்பளிப்பாக வழங்கி தமது நன்றியினையும் அன்பையும் வெளிப்படுத்தியிருந்தனர். கல்லூரி அதிபர் பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து ஆசிரியர்களின் சார்பில் ஏற்புரைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் நடன ஆசிரியர்கள் ஆகியோரால் தயாரித்து மாணவிகள் பங்குகொண்ட ஒயிலாட்டம் தனிநடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஆசிரியர்கள் பங்குபற்றிய இன்றைய அறிவியல்சார் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றுபவர்கள் ஆண்களா பெண்களா என்ற தலைப்பிலான சிறப்புப் பட்டி மன்றமும் இடம்பெற்றன.
உயர்தர மாணவர் மன்ற உறப்பினர் செல்வி தே. றோயனா அவர்கள் ஆசிரியர் தின கொண்டாட்டத்தினை சிறப்பாக அமைப்பதற்கு உழைத்த அதிபர் பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைவர்க்கும் இதில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் பண்டிதர் வேலயுதபிள்ளை பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.நிமலதாசன் மற்றும் சமூகமளித்த பெற்றோர் அனுசரணை வழங்கி ஊக்கிவித்த பழைய மாணவர் சங்கத்தின கனடா கிளை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றியதைத் தொடர்ந்து ஆசிரியர்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் மற்றொரு அங்கமாக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதியபோசன விருந்தில் அதிபர் ஆசிரியர்களுடன் விருந்தினர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “ஆசிரியர்களின் மகத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துகின்ற ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆதரவில் சிறப்புற நடைபெற்றது.”