கல்லூரியில் 14வயது 16வயது 18வயது ஆகிய வயது எல்லைகளை உடைய வீரர்களை உள்ளடக்கிய மூன்று உதைபந்தாட்ட அணிகள் நாளாந்தம் பாடசாலை நேரத்தின் பின்னர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கல்லூரியில் அண்மையில் உடற் பயிற்சி ஆசிரியராக இணைந்து கொண்ட திரு. அன்ரன் விமலதாஸ் அவர்கள் இவ்வணிகளிற்கான பயிற்சிகளை சிறப்பாக வழங்கி அவற்றினை பலம் மிக்க அணிகளாக மாற்றும் முயற்சியில் உழைத்து வருகின்றார்.
இவ்வணிகளில் ஒன்றிற்கு தேவையான காலணிகள் (Boots) கொள்வனவிற்கு லண்டனில் வதியும் காரைநகரைச் சோந்த இளம் தலைமுறையினரால் 60,000.00ரூபா உதவப்பட்டிருந்தது. காலணிகள் கொள்வனவிற்கு 49,000.00ரூபா செலவு செய்யப்பட்ட பின்னர் மிகுதி 11,000.00ரூபாவும் உள்ளக விளையாட்டு உபகரணங்கள் சில கொள்முதல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத விளையாட்டு ஆர்வலர்(Sports Activist) ஒருவர் இவ்வணிக்குத் தேவையான சீருடைகளைத்(Jersey) தயாரிப்பதற்கு தேவையான நிதியினை வழங்கி உதவியிருந்தார்.
இன்று பாடசாலை அனைத்துத் துறைகளிலும் முன்னர் நிலைநாட்டிய சாதனைகளை மீண்டும் நிலைநாட்டும் வகையில் அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு கல்லூரியின் புகழ்; மேலோங்கிவரும் வேளையில் கல்லூரியின் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த முன்னோர்களையும் நன்றியுடன் நினைவுகூருவது எங்கள் அனைவரதும் கடப்பாடக அமையவேண்டும்.
கடந்த காலங்களில் மாவட்டத்திலே சிறந்த உதைபந்தாட்ட வீரர்களைக் கொண்டு விளங்கிய கல்லூரி அணி பல பிரபல்யம் மிக்க கல்லூரிகளின் அணிகளைத் தோற்கடித்து வெற்றிகளையீட்டி கல்லூரியின் புகழை நிலைநாட்டி வந்துள்ளது. இவ்வணிவீரர்கள் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அணியில் இடம்பெற்றதுடன் காரைநகர் விளையாட்டுக் கழகங்களின் அணிகளிலும் இடம்பெற்று பிரகாசித்து வந்துள்ளனர்.
கல்லூரியில் பயின்ற அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை (சிவன்கோவிலடி) அகில இலங்கை ரீதியிலான விளையாட்டில் பங்குகொண்டு முதன்முறையாக் வெற்றியை பெற்றுக்கொண்ட சாதனையாளர் என்ற பெருமைக்குரியவர் என்பதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் விளையாட்டுத்துறையில் உயரிய அந்தஸ்தினைப்பெற்று விளங்கியவர். காரைநகரில் விளையாட்டுத்துறைச் செயற்பாடுகளின் முன்னோடியாக அமரர் சுந்தரம்பிள்ளை அவர்களே பார்க்கப்படுகின்றார்.
தற்போது ஜேர்மன் நாட்டில் வசித்துவரும் திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் 1981ல் ஸ்ரீலங்கா தேசிய அணி;யில் தெரிவுசெய்யப்படுவதற்கான தெரிவுப்பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் பாடசாலைக்கு பெருமைசேர்த்தவர்.
மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் பாடசாலையின் உதைபந்தாட்ட அணி வெற்றிகளைக் குவித்து மீண்டும் உன்னதமான நிலையினைப்பெற்று விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட காலணிகளுடனும் சீருடைகளுடனும் அணிவீரர்கள் உடற்பயிற்சி ஆசிரியருடன் நிற்பதையும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
No Responses to “கல்லூரியின் உதை பந்தாட்ட அணிக்கு காலணிகள் கொள்முதல் செய்வதற்கு லண்டனில் வதியும் காரைநகரின் இளம் தலைமுறையினர் உதவி”