கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியலாயத்தில் ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் இன்று செவ்வாய்கிழமை 14.10.2014 அன்று மாலை 4:00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் G.A.சந்திரசிறி, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலஸ்ரின் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளார் க.சத்தியசீலன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் S.ராஜேந்திரன், தீவகவலய கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பாடசாலை பான்ட் குழுவினர் அணிவகுப்பு மரியாதை செய்ய பான்ட் வாத்திய இசை, மற்றும் இன்னியம் வாத்திய இசை முழங்க பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாடசாலையின் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் மற்றும் மாணவர்கள் வெற்றிலை வழங்கி வரவேற்றனர். ஒய்வுநிலை மாவட்ட நீதிபதி ஏகநாதன் அவர்கள் ஜனாதிபதிக்கு பொன்னாடை போhத்திக் கௌரவித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் அதிபரின் தலைமை உரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
கல்வி அமைச்சர், பந்துல குணவர்த்தன தனது உரையில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 96 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும்; இப்பாடசாலைகளுக்கு 2016 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்திற்குள் இலங்கையில் உள்ள முன்னணி பாடசாலைகளில் உள்ள அனைத்து வளங்களும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்று இவ் ஆய்வு கூடத்திற்கு 66 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் 40 மாணவர்கள் ஒரே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பதற்கும் நெனச தொலைக்கல்வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் இவ் ஆய்வு கூடம் வசதி செய்கின்றது என்றார். ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் முதலாவது செயற்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஏனையவை தொடரும் எனவும் தெரிவித்தார்.
பழைய மாணவர் சங்க போசகர் எஸ்.கே.சதாசிவம் அவர்கள் கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம், இருமருங்கிலும் உள்ள பாடசாலையை மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் ஆகியன உள்ளடங்கிய விண்ணப்பம் ஒன்றினை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்து தங்கள் கோரிக்கையை நிறைவு செய்யுமாறு பழைய மாணவர் சங்கம் சார்பில் வேண்டிக் கொண்டார்.
கணிதம், மொழி, தகவல் தொழில்நுட்பம் நனச தொலைக்காட்சி மத்திய நிலையம் ஆகிய நான்கு அறைகளைக் கொண்ட இரு தளங்களைக் கொண்ட ‘மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூட நினைவுக் கல்லை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கு இவ் ஆய்வுகூடம் கிடைத்தமையிட்டு தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். இவ்ஆய்வு கூடம் கணிதம், மொழி, தகவல் தொழில்நுட்பம் ஆகியனவற்றைக் கற்பதற்கு வழிசெய்யும் எனத்தெரிவித்தார். பிள்ளைகள் படிப்பதற்கு ஊக்கம் அளிப்பதே தமது நோக்கம் என்றார். இவ்வாண்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் வடபகுதி மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனவும். இதற்கு ஊக்கம் அளித்துவரும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் எனத் தெரிவித்தார்.
தழிழில் உரையாற்றும்போது ‘கல்வியே செல்வம்’ அதனை மாணவர்கள் பெற்றிட வேண்டும் எனத்தெரிவித்து தனது உரையை நிறைவு செய்யதார்.
திறப்பு விழாவிற்கான நிதி அனுசரணையினை தாய்ச் சங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது”