வலந்தலை வடக்கு அ.மி.த.க. வித்தியாலயத்தின் அதிபராக ஏழு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றிருந்த செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சேவைநலன் பாராட்டு விழா சென்ற 05-07-2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் செல்வி விமலாதேவி மங்கள வாத்திய இசையுடன் நிகழ்வு நடைபெற்ற வித்தியாலயத்தின் மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருந்தார். மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வித்தியாலயத்தின் பதில் அதிபர் திருமதி ப.உமாதேவி அவர்கள் தலைமையில் பாராட்டு விழாவின் நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரம்மஸ்ரீ கு.சரவணபவானந்த சர்மா அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார். அயற்பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள், செல்வி விமலாதேவியிடம் மாணவர்களாகவிருந்தவர்கள், கல்வி ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டு செல்வி விமலாதேவி அவர்கள் ஆசிரியர் என்ற நிலையிலும், அதிபர் என்ற நிலையிலும் கால் நூற்றாண்டுகளாக ஆற்றிய கல்விப் பணிகளை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தியிருந்தமை சிறப்பானதாகும். செல்வி விமலாதேவி அதிபராகக் பணியாற்றிய காலத்தில் இப்பாடசாலையின் கல்வித் ;தரத்தினை மேம்படுத்தவும், பாடசாலையின் பல வளங்களைப் பெற்றுக்கொள்ளவும் அர்ப்பணிப்புடன் அயராது உழைத்திருந்தமையையும் தனது கற்பித்தல் திறமை ஊடாக மாணவர்களது மனம் கவர்ந்திருந்து சிறந்த கணிதபாட ஆசிரியராக விளங்கியமையையும் பல நல் மாணாக்கர்களை உருவாக்கி அவர்களது மனங்களில் இடம்பெற்றுள்ளமையையும் பலரும் தமது பாராட்டுரைகளின் போது குறிப்பிட்டிருந்தனர்.
இதேவேளை செல்வி விமலாதேவி அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்க மோதிரம் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும், மாலைகள் அணிவித்தும், பாராட்டுப் பத்திரங்கள் வாசித்தளித்தும், நினைவுப் பரிசில்கள் வழங்கியும் தமது நன்றியுணர்வினை வெளிப்படுத்தியிருந்தனர்.
செல்வி விமலாதேவி தமது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், மாணவர்களது கணித பாட அறிவினை மேம்படுத்தும் வகையில் தனது கல்விப் பணி தொடரவேண்டும் என்கின்ற விருப்பத்தினை பாராட்டுரை வழங்கியோர் வெளியிட்டிருந்தமையைக் குறிப்பிட்டு தனது முழுமையான விருப்பமும் எண்ணமும் அதுவேயாகும் என்பதுடன் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தனது கல்விப் பணி தொடரும் எனவும் தெரிவித்தார். 3ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரைக்குமான மாணவர்களுக்கு தனிப்பட்டமுறையில் கணித பாடத்தினை கற்பித்து வருவதாகக் குறிப்பிட் இவர் அவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் பெற்றுக்கொள்ளாது இலவச சேவையாகவே இக் கற்பித்தலை செய்துவருவதாகத் தெரிவித்தார்.
பாடசாலையின் மேற்கு எல்லையிலுள்ள 104அடி நீளமான பகுதிக்கு அத்திவாரம் இட்டு, கொங்கிறீற்றிலான தூண்கள் நிறுத்தி, தகரங்கள் பொருத்தி அமைக்கப்பட்ட வேலியினை இவர் தனது சொந்தப் பணத்திலேயே செய்வித்திருந்தமையானது மாணவர்களது நலனில் இவர்கொண்டுள்ள அக்கறையினையும், சமூக ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தவதாகவுள்ளது.
விழாவின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “செல்வி விமலாதேவி விசுவநாதனின் கல்விப் பணியின் உன்னதத்தினை பிரதிபலித்த சேவைநலன் பாராட்டு விழா.”