கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் காரைநகர் களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தவரும், நீண்ட காலமாக சமூக, அரசியல் பணி ஆற்றி வருபவரும் தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் ஆக்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்னும் நூல் வெளியீட்டு விழா 02.11.2014 அன்று கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் ஆறுமுகநாவலர் சபை செயலாளர் உடுவையூர் தில்லை நடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபைத் தவிசாளர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் செயலாளர் திரு.தி.மார்க்கண்டு அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் சமய, சமூக, இலக்கிய, அரசியல், தொழிற்சங்கத் துறை அனுபவங்களின் வரலாற்றுப் பதிவான நூலின் ஆய்வுரையை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி.விஜயகலா மகேஸ்வரன் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியர் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர்.தியாகராசா மகேஸ்வரனின் அமைச்சரவையில் செயலாளர் நாயகமாகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூல் வெளியீட்டு விழாவை லண்டன் சுடரொளி வெளியீட்டு கழகத்தினரும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
‘நீங்காத நினைவுகள்’ நூல் ஏற்கனவே பிரித்தானியாவில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் ‘நீங்காத நினைவுகள்’ நூல் கொழும்பில் வெளியிடப்பட்டது”