‘இசைக்கலாபாரதி’ மயூரன் மனோகரனும் அவரது சகோதரனான ‘இசைக்கலாபாரதி’ மிதுரன் மனோகரனும் இணைந்து லய பக்த (LAYA PAKTHA) எனும் பெயரில் நுண்கலைக் கல்லூரி ஒன்றை நிறுவி முறையே மிருதங்கம், வயலின் ஆகியவற்றை பயிற்றுவித்து வருகின்றனர். லய பக்த நுண்கலைக் கல்லூரி வழங்குகின்ற செல்வன் மிதுரன் மனோகரனின் வயலின்-சோலோ கச்சேரி எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி’ விருதினைப் பெற்றுக்கொண்டவரும், மிருதங்க இசை மேதை எனப் போற்றப்படுகின்றவருமாகிய திருவாரூர் பக்தவத்சலம் அவர்கள் செல்வன் மிதுரனின் வயலின்-சோலோ இசைக்கு மிருதங்கம் வாசிக்கவிருப்பது சிறப்பானதாகும். அதேவேளை செல்வன் மயூரன் மனோகரனும் இவருடன் இணைந்து மிருதங்கம் வாசிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மிதுரன் மனோகரன் அவர்கள் தமிழ் இசை உலகில் வளர்ந்து வருகின்ற முன்னணி வயலின் இசைக் கலைஞர் என்பதுடன் பல முன்னணிக் கலைஞர்களின் இசை அரங்குகளிலும, அரங்கேற்ற நிகழ்வுகளிலும் வயலின் இசை வழங்கி இசை உலகின் பாராட்டினைப் பெற்று வருபவர்.
இந்நிகழ்வின் ஊடாகப் பெற்றுக்கொள்கின்ற நிதி கனடா கந்தசுவாமி கோயிலின் திருப்பணிக்கு உதவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வன் மிதுரன், காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான திரு.மகேசன் மனோகரனின் புதல்வன் என்பதுடன், இச்சங்கத்தினை உருவாக்க ஊக்குவித்ததுடன் அதன் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து ஆர்வத்துடன் செயலாற்றி வந்தவரும், காரைநகர் மக்கள் நன்கு அறிந்த இசை ஆர்வலருமான அமரர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பேரனும் ஆவார். இதேவேளை மிதுரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நடாத்திய ‘சுப்பர் சிங்கர்’ சாயி விக்கினேசின் இசைக் கச்சேரிக்கு சன்மானத் தொகை எதனையும் பெற்றுக்கொள்ளாது வயலின் இசைத்து ஆதரவு வழங்கியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வு குறித்த விளம்பரப் பிரசுரத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.கலைஞர் மிதுரன் மனோகரனின் வயலின்-சோலோ கச்சேரியில் ‘கலைமாமணி’ திருவாரூர் பக்தவத்சலத்தின் மிருதங்க இசை!”