வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அநுசரணையுடன் தீவகக் கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட பௌர்ணமிக் கலை விழா சென்ற வியாழக்கிழமை(06.11.2014) பௌர்ணமி தினத்தன்று கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் தலைமையில் நடைபெற்றது.
தமிழர் பாரம்பரிய கலை, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மாதந்தோறும் பௌர்ணமிக் கலைவிழா ஒவ்வொரு வலயத்திலும் நடத்தப்பட்டுவருகின்றது. அந்தவகையில் தீவகக் கல்வி வலயத்தினால் சென்ற ஆண்டு வேலணை மத்திய கல்லூரியில் நடத்தப்பட்ட இவ்விழா இவ்வாண்டு எமது கல்லூரியில் நடத்தப்பட்டது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஓய்வுநிலை பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக வடமாகாண ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் வீ.இராசையா அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
மடத்துக்கரை அம்பாள் கோவிலில் வழிபாடுகளைத் தொடர்ந்து புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இன்னிய இசை நடனத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
தேசிய, மாகாண, வலய, மற்றும் கல்லூரிக் கொடிகள் முறையே ஏற்றப்பட்டு ஸ்ரீலங்காப் பண், கல்லூரிப்பண் என்பன முறையே இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றியபின் ஊவா மாகாணத்தில் இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டபின் கலைநிகழ்வுகள் தொடங்கின.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நுண்கலைத்துறை ஆசிரியர்கள் இசை வழங்க கரகம், கும்மி, கோலாட்டம், காவடி ஆகிய கிராமிய நடனங்களின் சங்கமமாக மாணவர்கள் ஆடிய வரவேற்பு நடனம் எடுத்த எடுப்பிலேயே பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை மாணவிகளின் உழவர் நடனம் வேலணை மத்திய கல்லூரி மாணவிகளின் செம்பு, சுளகு, நடனம், நெடுந்தீவு மாணவர்களின் செம்பு நடனம், யாழ்ரன் கல்லூரி மாணவர்களின் நளன் தமயந்தி நாட்டிய நாடகம் என்பனவும் ஆசிரியர்களின் வயலின் சோலோ கச்சேரி என தமிழர் கலை, பாரம்பரிய கலை பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் மிகத் தரமான கலைப் படைப்புகள் அடுக்காக அரங்கேறின.
1982 ஆம் ஆண்டு அதிபர் திரு.எஸ்.பத்மநாதன் அவர்களின் பதவிக்காலத்தின் போது புரட்சிக் கவிஞர் பாரதியாரின் நூற்றாண்டு விழா முத்தமிழ் கலைவிழாவாகச் சிறப்பாக நடபெற்றமைக்குப் பின் எமது கல்லாரியில் நடைபெற்ற மிகச் சிறந்த முத்தமிழ் விழா இவ்விழா என்று தெரிவிக்கப்படுகின்றது.
தீவக வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், வியாவில் ஐயனார் கோவில் அறங்காவலர் க.சோமசேகரம் களபூமி முத்தமிழ் பேரவை நிறுவுநர் திருமதி.ந.இராசமலர் ஆகியோர் உட்பட்ட பலர் விழாவிற்கு சமூகமளித்துச் சிறப்பித்திருந்தனர். பாரம்பரியக் கலை விழாவான இவ்விழாவிற்கு சமூகமளித்திருந்தவர்களும் பாரம்பரிய உடை அணிந்திருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது.
தீவக வலய தமிழ்த்துறை உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.செல்வராசா நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழர் பாரம்பரிய கலைகளின் சங்கமமாக அரங்கேறிய பௌர்ணமிக் கலைவிழா தமிழ் இனி மெல்லச் சாகுமா இல்லை வாழுமா என்போருக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புறநானுற்றுத் தமிழர் நாம் என்று நினைவூட்டிச் சென்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “தீவகக் கல்வி வலயப் பள்ளிகளின் கலைச் சங்கமமாக அரங்கேறிய பௌர்ணமிக் கலைவிழா”