பாடசாலை விளையாட்டு மைதானத்தின் மேற்குப்புற எல்லையில் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான ஆறு பரப்புக் காணி உரிமையாளர்களின் சமூக அக்கறையும் பாடசாலை மீதான விசுவாசமும் காரணமாக அக்காணியின் உரிமை பாடசாலையின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு சட்டரீதியான ஆவணம்(உறுதி) பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவரும் பாடசாலை வளர்ச்சியில் அக்கறைகொண்டு அவ்வப்போது பல்வேறு உதவிகளை வழங்கி வருபவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமாகிய திரு.வெற்றிவேலு நடராசாவிற்கும் அவரது குடும்ப உறவுகளிற்கும் உரித்துடையதான இக்காணியினை அவர்கள் அனைவரும் இணைந்து கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி உதவியுள்ளனர். இக்காணி பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றதன் மூலம் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் நீளத்தினை மேற்குப்புறமாக 22 மீற்றரால் விரிவாக்கம் செய்வதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 115மீற்றர் நீளத்தையுடைய மைதானம் தற்போது 137மீற்றராக விரிவாக்கம் பெற்றுள்ளது.
இதேவேளை வட மாகாண கல்வி அமைச்சினால் மைதான அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா மூலம் நன்கொடையாகப் பெறப்பட்ட காணியில் மழை காலத்தில் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கும் வகையில் 150 லோட் மண் கொட்டப்பட்டு; பரவும் பணி முன்னெடுக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
கொட்டப்பட்ட மண்ணை பரவும் வேலையினை செய்வதற்கு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை நிர்வாக உறுப்பினரும் தொழிலதிபருமான திரு.நேசேந்திரம் தமது பக்கொ பொறியினை வழங்கி உதவியிருந்தார்.
காணியினை நன்கொடையாக வழங்கி உதவிய திரு.வெற்றிவேலு நடராசாவிற்கும் அவரது குடும்ப உறவுகளிற்கும்; அதிபர்; திருமதி வாசுகி தவபாலன் பாடசாலைச் சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்வதுடன் இவர்களது பாடசாலை மீதான விசுவாச உணர்வினையும் பாராட்டியுள்ளார்.
தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த சில பணிகள் நிறைவேறுவதற்கு இக்காணி நன்கொடை; மூலம் வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மண் கொட்டப்பட்டு நிரவும் பணி முன்னெடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.
No Responses to “வெற்றிவேலு நடராசா குடும்பத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆறு பரப்புக்காணி மூலம் விளையாட்டு மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது”