காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களுள் சிலர் காலணிகள் அணியாது பாடசாலைக்கு சமூகமளித்து வந்த நிலை காணப்பட்டது. வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இம்மாணவர்கள் காலணிகளுக்கான விலையைக் கொடுத்து வாங்கி அணியக்கூடிய பண வசதியற்ற காரணத்தினாலேயே கவலைக்குரிய இந்நிலை இருந்து வந்துள்ளது. காலணியற்றிருந்த இம்மாணவர்கள் உள்ளிட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 107 மாணவர்களிற்கு இக்கல்லூரியின் பழைய மாணவனும் கனடாவில் வசித்து வருபவருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள், மறைந்த தமது மனைவியான அமரர் மனோரஞ்சனாவின் பெயரில் நிறுவப்பட்டுள்ள உதவி நிதியத்திலிருந்து, காலணிகளை வழங்கி உதவியுள்ளார். அமரர் மனோரஞ்சனாவின் 6வது ஆண்டு நினைவாக வழங்கப்பட்டுள்ள இவ்வுதவியின் மூலம், இம்மாணவர்களும் இவர்களது பெற்றோரும் எதிர்கொண்ட மனச்சங்கடமான நிலை நீக்கிவைக்கப்பட்டுள்ளதுடன் இம்மாணவர்களும் ஏனையோருடன் சமானமாக இருந்து கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது எனலாம்.
இவர்கள் அனைவருக்கும் காலணிகளை வழங்கிவைத்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (31-07-2019) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. கல்லூரியின் மாணவர்களும், ஆசிரியர்களும், காலணிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளரான திரு.கனகசபாபதி அவர்கள் கல்லூரி மீது மிகுந்த விசுவாச உணர்வு கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டதுடன் காலணிகள் அற்ற மாணவர்களுக்கு காலணிகளை உதவிய அவரது முன்னுதாரணமான செயற்பாட்டினைப் பாராட்டி கல்லூரிச் சமூகத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
மாணவர்கள் தமது பெற்றோருடன் சென்று காலணிகளைப் பெற்றுக்கொண்டதுடன் சமூகமளிக்கமுடியாத மாணவர்களின் சார்பில் அவர்களது பெற்றோர் சென்று அவற்றினைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மாணவர்களுக்கு அமரர் மனோரஞ்சனா உதவி நிதியத்திலிருந்து காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.”