பல தமிழ்ப் பேரறிஞர்கள் வாழ்ந்த காலகட்டமாகிய 19ஆம் நூற்றாண்டில் காரை.மண்ணில் வாழ்ந்து ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபின் செழுமையை அடையாளம் காட்டவல்ல முக்கியமான வரலாற்றுப் பாத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தவர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் ஆவார். புலவரின் கனிஸ்ட புதல்வனான சிவசிதம்பர ஐயர் அவர்களால் எழுதப்பட்டு 1908ம் ஆண்டு வெளியிடப்பெற்றிருந்த புலவர் அவர்களின் வரலாற்று நூலினை புலவர் அவர்களின் 200வது பிறந்த நாளினை நினைவுகூருகின்ற வகையில் கனடா சைவ சித்தாந்த மன்றம் மீளப் பதிப்பித்து சென்ற மே மாதம் 31ம் திகதி மிசிசாகா நகரில் வெளியிட்டிருந்தது. புலவர் அவர்களின் மகத்தான சைவத் தமிழ்ப் பணிகளை உள்ளடக்கிய ஆக்கங்களை மேலதிக இணைப்புக்களாகக் கொண்டு ‘கார்த்திகேயப் புலவர் மலர்’ என்கின்ற பெயரில் பதிப்பிக்கப்பெற்றுள்ள இந்நூலின் அறிமுக விழா எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் ‘சிவநெறிச்செல்வர்’ தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இவ் அறிமுகவிழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், ஈழத்தின் தலைசிறந்த திறனாய்வாளருமாகிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் நூலின் அறிமுக உரையினை நிகழ்த்தவுள்ளமை சிறப்பானதாகும்.
இலக்கிய ஆர்வலர்கள், சைவசமய உணர்வாளர்கள், காரைநகரின் அபிமானிகள், அனைவரையும் இந்நூலின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கனடா சைவ சித்தாந்த மன்றம் அன்புடன் வேண்டிக்கொண்டுள்ளது.
புலவரின் பேரனான பிரம்மஸ்ரீ.கா.சி.மகேசசர்மா F.R.A.S. அவர்கள் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் என்பதுடன் புலவரின் பீட்டனான பண்டிதர் கலாநிதி க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விழாவின் நிகழ்ச்சி நிரலுடனான அறிவித்தல் பிரசுரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “காரைநகரின் பெருமையை உலகறியச் செய்த பேரறிஞர் கார்த்திகேயப் புலவர் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக விழா”