பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிசனரிமாரின் அரச தொழில் வாய்ப்பு என்னும் மாய வலைக்குள் சைவத்தமிழ் மக்கள் சிக்கினர். இவ்வாறு சைவத்தமிழ் மரபு சிதைவுற்று வந்தமையைத் தடுத்து நிறுத்தி வந்தவர் நல்லூரின் நாவலர் பெருமான்.
நாவலரின் செயற்பாடுகளால் பெரிதும் கவரப் பெற்றவர் காரைநகர் தந்த செயல் வீரன் ச.அருணாசல உபாத்தியாயர் ஆவார். சைவப் பெற்றோரின் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற அருணாசல உபாத்தியாயரின் எண்ண மேலீட்டினால் உருவானதே காரைநகரில் சைவப் பாடசாலைகள் அமைக்கும் செயல்.
மகான் அருணாசல உபாத்தியார் சைவப்பாடசாலைகள் அமைக்கும் தமது திட்டத்தை எமது ஊரில் வாழ்ந்த சைவப் பெருமக்களை அணுகிக் கருத்தேற்றம் செய்து அவர்களின் ஆதரவுடன் காரைநகரில் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை(கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்), வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலை ஆகியனவற்றைத் தோற்றுவித்தார்.
கொழும்பு நாவலர் நற்பணி மன்றத்தினால் நாடெங்கிலும் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த சைவப் பாடசாலைகளில் நாவலர் சிலை அன்பளிப்பு செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் சரித்திர நாயகன் ச.அருணாசல உபாத்தியாயரின் எண்ணத்தில் தோன்றி நிறுவப்பட்ட சைவ ஆங்கிலப் பாடசாலையாகிய கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தில் யாழ்ப்பாணம் நாவலர் நற்பணி மன்றத்தினால் அண்மையில் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிலை திறப்பு வைபவத்தில் நாவலர் நற்பணி மன்றத் தலைவர் திரு.கருணை ஆனந்தன், யாழ் பல்கலைக் கழக ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி.நாச்;சியார் அவர்களும் தீவக வலயத் தமிழ் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.செல்வராஐh மற்றும் காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்
நாவலர் நற்பணி மன்றத் தலைவர் திரு.கருணை ஆனந்தன் அவர்கள் நாவலரின் சிலையை சம்பிராதாய பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. அதிபர் தனது தலைமை உரையில், நாவலரின் வழியில் எமது காரைநகர் ஆசான் ஸ்ரீமான் ச.அருணாசால உபாத்தியாயர் அவர்கள் சைவப் பாடசாலைகளையும், ஆசிரிய கலாசாலையையும் அமைப்பதற்கு ஆற்றிய பணிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் நாவலர் பெருமான் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் பற்றி உரையாற்றினார்கள்.
கல்லூரி ஆசிரியை செல்வி.ந.சிவருபி அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளது”