சிவபூமியாகிய காரைநகரில் சைவம் வளர்க்கும் காரைநகர் மணிவாசகர் சபையின் பவளவிழா மலர் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை(25.12.2014) அன்று கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்களின் எண்ணத்தில் உதித்து யோகர்சுவாமிகளின் அருளாசியுடன் தில்லைக்கூத்தன் திருவருளால் 01-01-1940 இல் தொடங்கப்பட்டதே காரைநகர் மணிவாசகர் சபை ஆகும்.
இன்று பவளக் காணும் மகிமை பெற்ற காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக எமது கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் பதவி வகித்து பவளவிழாவினை ஓருங்கமைத்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக சளையாது சைவப்பணியாற்றும் காரைநகர் மணிவாசகர் சபையின் நிறுவுநர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் பவளவிழா மலரினை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
மலரின் முதற் பிரதியை சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்ட இந்து சாசனம் இதழாசிரியர் பேராசிரியர் குமாரவடிவேல் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சைவாச்சரியர்கள், மருத்துவர்கள், கல்வியதிகாரிகள், அதிபர்கள், வணிகப்பெருமக்கள் என நூற்றுக்கணக்கானோர் மூதறிஞர் வைத்தீசுவக் குருக்களின் கரங்களினால் பவளவிழா மலரினைப் பெற்றுக் கொண்ட பேறினைப் பெற்றனர்.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்;தியாலயத்தின் சிறப்புமிக்க பழைய மாணவர்களில் ஒருவரான மூதறிஞர் கலாநிதி சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மிக மூத்த பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரிக்குப் பெருமைசேர்க்கும் பழைய மாணவர் பண்டிதர், தத்துவக்கலாநிதி சிவத்தமிழ்வித்தகர். க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களை பாடசாலைச் சமூகத்தின் சார்பாக கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் பொன்னாடை போர்த்து மாலை அணிவித்துக் கௌரவித்தார்.
கல்லூரியின் மிகமூத்த சிறப்புமிகு பழையமாணவர் மூதறிஞர் சிவத்தமிழ்வித்தகர் கலாநிதி.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களைக் கௌரவிப்பதன் மூலம் பாடசாலை சமூகம் பெருமையடைகின்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியின் மூத்த பழைய மாணவர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்களுக்கு பாடசாலை சமூகம் கௌரவம்”