நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் ‘சைவம் தழைத்தோங்க’ என்கின்ற தொனிப்பொருளில் தினமும் ஆன்மீக நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. சென்ற 20-08-2019இல் நடைபெற்ற 15ஆம் நாள் உற்சவத்தின்போது ஒழங்கமைக்கப்பட்டிருந்த இவ் ஆன்மீக நிகழ்வில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றிருந்தன.
புஸ்பாஞ்சலி, கணபதி ஸ்தோத்திரம், சண்முகன் கௌத்துவம் ஆகிய நடனங்களையும் தனி இசை, குழு இசை ஆகிய இசைக் கச்சேரிகளையும் மாணவர்கள் வழங்கி பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்றனர்.
நடன நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிய கல்லூரியின் நடன ஆசிரியையான திருமதி பிருந்தா சோமலோஜன் நட்டுவாங்கம் செய்திருந்த அதேவேளை இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன், செல்வி கமலவாணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து குரலிசை வழங்கியிருந்தனர். திரு.ப.விக்கினேஸ்வரன் மிருதங்கமும் திரு.கருணாகரன் கீபோட் வாசித்தும் பின்னணி இசை வழங்கி அணிசேர்த்தனர்.
மாகாண மட்ட பண்ணிசைப்போட்டியின் வெற்றியாளரான செல்வி அமுதா ஆனந்தராசா தனி இசைக் கச்சேரியை நிகழ்த்தியிருந்தார்.
இக்கலை நிகழ்வுகள் அனைத்தும் ஓம் தொலைக்காட்சி ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.
கல்வியோடு மட்டுமல்லாது சைவசமயம், கலை ஆகிய பராம்பரியங்களையும் காரை.இந்து தொடர்ந்து பேணிவருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லை நகரில் நடைபெற்ற மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இக்கலை நிகழ்ச்சிகளுக்கான அநுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “‘சைவம் தழைத்தோங்க’ நிகழ்வில் சிறப்பாக நடைபெற்ற காரை.இந்து மாணவர்களின் நடன, இசை நிகழ்ச்சிகள்.”