கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணிக்கு நடராசா நினைவு மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய திருமதி வாசுகி தவபாலன் தலைமையில்; ஆரம்பமாகி நடைபெற்றது. செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
அதிபர் அறிக்கை ஆண்டறிக்கை வரவு-செலவு அறிக்கை என்பன முறையே அதிபர் திருமதி வாசுகி தவபாலன் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் பொருளாளர் திரு.அகிலன் சுந்தரலிங்கம் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களின்றி சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. மேற்குறித்த அறிக்கைகள் அனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருந்ததுடன் வரவு-செலவு அறிக்கை விபரமாகவும் விளக்கமாகவும் வெளிப்படுத்தப்பட்ட முறை குறித்து உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை உதவிப் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தி ஊக்கிவிப்பதற்கான திட்டங்களிற்கு உதவிகள் வழங்குவதில் எமது சங்கம் முன்னுரிமை வழங்கிவருவதாகவும்; இவை தொடர்பான செயற்திட்டங்கள் உரியமுறையில் வகுக்கப்பட்டு உதவிகோரப்படும் பட்சத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி கல்லூரியின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே ஆங்கில பாடத்திற்கான மேலதிக வகுப்பு இறுதிப் பரீட்சைக்குக்கு தோற்றவுள்ள க.பொ.த.(சாதாரணம்)தர மேலதிக வகுப்பு வகுப்பு மாணவர்களிற்கான சிற்றுண்டி வழங்குதல் ஆகியவற்றிற்கான உதவிகள் வழங்கப்பட்டிருந்தபோதும்; மாணவர்களின் வரவில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இத்திட்டங்களைத் தொடரமுடியாமல் போனமை குறித்து கவலை தெரிவித்தாh.;
பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் உப-தலைவர் திரு.சி.நேசேந்திரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது வரலாற்றில் எக்காலத்திலும் அழியாத கருங்கல்லிலான சிலைகளின் மகத்துவத்தை விளக்கி ஸ்ரீமான்.முத்து சயம்பு அவர்களிற்கும் கொடைவள்ளல் அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலையினை பாடசாலையில் நிறுவ வேண்டும் எனவும் அதற்கான செலவுகளை தாமே பொறுப்பேற்க முடியும் என்ற கருத்தினையும் முன்மொழிந்து பேசினார்.
திரு.சி.நேசேந்திரம் அவர்களின் கருத்தினை வழிமொழிந்து உரையாற்றிய கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.த.பரமானந்தராஜா இக்கல்லூரியின் வெள்ளிவிழா அதிபராகச் சேவையாற்றி கல்லூரியில் அவரது சேவைக் காலத்தைப் பொற்காலமாகப் பதிவாக்கிய கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலை அமைத்தல் வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் எமது காரைநகரைச் சேர்ந்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சிந்தனையில் கருக்கொண்டு அமைக்கப்பட்டதே இப்பாடசாலை ஆகும். காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான காரைநகரின் சைவக் கல்விப்பாரம்பரியத்தின் முன்னோடியான மகான் சிவத்திரு.ச.அருணாசல உபாத்தியாயருக்கும் கருங்கல்லிலான சிலை எமது பாடசாலையில் நிறுவப்படும்போதே எமது கல்லூரியின் வரலாறு முழுமை பெறும் என்று அறிவுபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது கருத்தினை ஆணித்தரமாக முன்வைத்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலனின் முன்மொழிவினை உள்வாங்கிய சபையினர் மத்தியில் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஜயா பரமானந்தராசா அவர்கள் கருத்துரைக்கும்போது மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கும் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களுக்கும் சிலைகள் நிறுவும் செலவினை கனடா-காரை கலாச்சார மன்றம் எற்றுக்கொள்வது குறித்து நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்ததுடன் சாத்தியப்படாதவிடத்து கலாநிதி.ஆ.தியாகராசாவிற்கு சிலை நிறுவும் செலவினை தாமே ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலை வரலாற்றில் பதிவாகி என்றென்றும் நினைவு கூரப்படவேண்டிய பெரியார்கள் நால்வருக்கும் கருங்கல்லில் சிலைகள் நிறுவவேண்டும்; என்ற முன்மொழிவுகள் சபையில் ஆட்சேபனையின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்ற பாடசாலையின் பெயரினை; காரைநகர் இந்துக் கல்லூரி என்ற முன்பிருந்த பெயருக்கு மீளவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரு த.சற்குணம் அவர்களினால் முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டிருந்த பிரேரணை; தொடர்பில் சபையோரின் அபிப்பராயத்தினை வாக்கெடுப்பு மூலம் தலைவர் கோரியபோது இப்பிரேரணை எதிர்ப்பின்றி ஏகமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அங்கத்தவர்களின் கருத்துக்களிற்கும் சந்தேகங்களிற்கும்; விளக்கமாகவும் விரிவாகவும் பதலளித்துப் பேசினார். தமது பேச்சின்போது பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவிகள் குறித்து விசேடமாக குறிப்பிட்ட அவர் அச் சங்கம் எமது கோரிக்கைகளை ஏற்று வழங்கிவருகின்ற அதிக உதவிகளே பாடசாலையின் உடனடித் தேவைகளிற்கும் பல முக்கியமான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை பாடசாலையின் சுமுகமான செயற்பாட்டிற்கு வழிவகுத்துள்ளமை குறித்து நன்றியுணர்வுடன் பதிவுசெய்திருந்தார். இச் சங்கத்தின் உதவிகளிற்கு அப்பால் காரைநகரின் முதன்மைப் பாடசாலையின் பெயரால் கனடாவில் பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்திருக்கின்ற செய்தி உளரீதியாக எமக்கு மிகுந்த உத்வேகத்தினையும் பலத்த்pனையும் வழங்குவதுடன் மட்டுமல்லாது எம்மை பெருமைகொள்ள வைக்கின்றது எனவும் உளப்பூரிப்புடன் வாசுகி தவபாலன் மேலும் குறிப்பட்டார்.; இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் உருவாக்கம்பெற்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை குறுகிய காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் ஆற்றிவரும் பங்கின் முக்கியத்துவத்தை அதிபரின் மேற்குறித்த கூற்று வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயலாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் தொழிலதிபர்; திரு.த.சற்குணம் (சீமாட்டி) யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கல்லூரியின் வளர்ச்சி குறித்த பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். புpரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதய போசகர் சபை உறுப்பினருமாகிய திரு.வி.நாகேந்திரமும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அடுத்து வரும் ஒரு ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பதற்கான புதிய நிர்வாக சபையில் இடம்பெறும் உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். கல்லூரியின் அதிபர் பதவி வழியால் தலைவராக இருக்க வேண்டும் என்கின்ற விதிக்கமைவாக திருமதி வாசுகி தவபாலன் தலைவராக தொடர்ந்து பதவி வகிப்பார்.
நிர்வாக சபையில் இடம்பெற தெரிவான உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம் – ஆசிரியர்
செயலாளர்: திரு:கணபதிப்பிள்ளை நிமலதாசன் – தபாலதிபர்
உதவிச் செயலாளர்: திரு.வி.ஹம்சன் – வங்கி அலுவலர்
பொருளாளர்: திரு.அகிலன் சுந்தரலிங்கம் – கூட்டுறவுப் பரிசோதகர்
உதவிப் பொருளாளர்: திரு.த.சற்குணம் – தொழிலதிபர்
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு.நல்லதம்பி யோகநாதன் – தொழிலதிபர்
திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் – பல்கலைக்கழக விரிவுரையாளர்
திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் – ஆசிரியர்
திரு.பாலசுப்பிரமணியம் கருணாகரன் – தபாலக அலுவலர்
பிரம்மஸ்ரீ.கு.சரவணபவானந்த சர்மா – ஆசிரியர்
திரு.கயிலாயபிள்ளை நாகராசா – நீதிமன்ற அலுவலர்
திரு.பாலசிங்கம் இராமகிருஷ்ணன் – ஆசிரியர்
திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம் – ஓய்வுநிலை அரச அலுவலர்
உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன்
நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டம் செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து திரு.ஆ.செந்தில்நாதனின் இறைவணக்கத்துடன் இனிதே நிறைவுற்றது. பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட்டவகையில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்ற அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களிற்கு ஊக்குவிப்பாகவும் உந்துதலாகவும் இக்கூட்டம அமைந்திருந்ததை எண்ணி மனநிறைவுடன் கூட்டத்தில் கலந்துகொண்டோர் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “புதிய நிர்வாக சபைத் தெரிவுடன் பயனுள்ள கருத்துக்களின் பகிர்வும் இடம்பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம்”