கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியலாயத்தில் மாணவர்களின் கல்வித்தர அபிவிருத்தியின் ஒர் அங்கமாக பாடசாலையின் பல்லூடக அறையை மேம்படுத்தும் திட்டத்தை எமது நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்றம் அண்மையில் முன்னெடுத்திருந்தது.
மேற்படி திட்டத்தின் கணிசமான பகுதி நிறைவடைந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டப திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 03.01.2015 அன்று பி.ப 2:00 மணிக்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடா-காரை கலாச்சார மன்ற செயலாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி, லண்டன் காரை நலன்புரிச் சங்க போசகர்களான திரு.வி.நாகேந்திரம், திரு.ப.தவராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்;தனர்.
ஓய்வுநிலை கல்வி அதிகாரிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் சமூகசேவை அமைப்புகளின் உறுப்பினர்கள், புலம்பெயர் காரை அமைப்புகளின் உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கனடா-காரை கலாச்சார மன்ற உப-தலைவர் திரு.பொன்னம்பலம் தவக்குமார், நிர்வாக உறுப்பினர் திரு.தம்பையா அம்பிகைபாகன் ஆகியோரும் நிகழ்வில் நேரடியாகப் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபத்தை கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்;தராஜா அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
விருந்தினர்கள் மங்கல விளக்கேற்ற கல்லூரி மாணவர்களின் இறைவணக்கத்தைத் தொடர்ந்து ஆசிரியை திருமதி றகிதா பாலகாசன் வரவேற்புரையாற்றினார்.
அதிபரின் தலைமையுரையைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு பற்றிய செய்முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர்.
அடுத்து முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக பழைய மாணவர்களுக்கான நேரம் அமைந்திருந்தது. வருகை தந்திருந்த பழைய மாணவர்களை அவுஸ்ரேலியா, கனடா, பிருத்தானியா, காரை என நான்கு அணிகளாகப் பிரித்து அதிபரினால் நடத்தப்பட்ட ‘விளையாட்டு அல்ல விளையாடு’ என்ற போட்டி நிகழ்ச்சி எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருந்தது.
இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் எம்மை மீண்டும் பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் செல்வதுடன் எமக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் நேர்மனப்பாங்குடன் சிந்திக்கவும் வைக்கின்றது.
அடுத்து ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் உரையாற்றும் போது இ;வ்வாறான பல்லூடக மாநாட்டு மண்டபம் வசதியுள்ள நகரங்களில் அமைந்துள்ள ஒரு சில செல்வந்த பாடசாலைகளிலேயே உள்ளதாகவும் இந்த வசதி எமது மாணவர்களுக்குக் கிடைத்தமை பெரும் வரப்பிரசாதம் எனவும் கூறினார். தினமும் நான்கு மணித்தியாலங்கள் பல்லூடகப் பயன்பாட்டுடனான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இவ்வசதியினைப் பயன்படுத்தி வரும்போது இக்கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பயனை எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா உரையாற்றும்போது தாம் எதிர்பார்த்ததிலும் சிறப்பாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் நவீன கற்பித்தல் முறையில் எமது கிராம மாணவர்கள் சிறந்த பயன்பெறுவதற்கு இப்பல்லூடகப் பயன்பாடு உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். இத்திட்டத்தை வகுத்து அதனை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களைப் பாராட்டி தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
கனடா-காரை கலாச்சார மன்றம் இத்திட்டத்திற்கான நிதி அனுசரணையாக பதின்மூன்று இலட்சத்து அறுபதினாயிரம் ரூபா (ரூ13,60,000) ஒதுக்கியிருந்தது. இதன் முதற்கட்ட நிதி விடுவிப்பாக ஆறு இலட்சம் ரூபாவினை ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது கனடா-காரை கலாச்சார மன்றம் நிதி அனுசரணை”