காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழுமையான பங்களிப்புடன் கணித, விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்காட்சி நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் சென்ற 23-09-2019 திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரைக்கும் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக வலயத்தின் விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் திருமதி பு.ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். காரைநகர் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டோரும் வருகைதந்து ஆர்வத்துடன் கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர். கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றிலுள்ள அறிவினைப் பயன்படுத்தி உருவாக்கிய காட்சிப் பொருட்களும் அவை தொடர்பில் மாணவர்கள் வழங்கிய சிறப்பான விளக்கங்களும் பார்வையாளர்களின் வரவேற்பினையும் பாராட்டினையும் பெற்றிருந்தன.
விருந்தினர்கள் நாடாவை வெட்டி கண்காட்சி நிகழ்வினை தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து கல்லூரியின் அதிபருடன் இணைந்து கண்காட்சியை சுற்றிப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்ற கணித, விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்காட்சி.”