காரைநகர் கல்விப் பாரம்பரியத்தின் முதன்மை அடையாளமாக விளங்குகின்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாடு என்கின்ற உன்னதமான இலட்சியப் பயணத்தினை தொடங்கிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையானது, பல வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்திய வண்ணம் தளராது தனது பயணத்தினை மேற்கொண்டு இன்று ஏழு ஆண்டுகளைப் நிறைவுசெய்து எட்டாவது ஆண்டில் பாதம் பதித்துள்ளது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை சங்கத்தின் நிர்வாகம் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றது என சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி நிர்வாகம் வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளது.
இச்செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு தடங்கல்கள், சவால்கள், சோதனைகள் அனைத்தையும் தாண்டி கல்லூரி அன்னை மீது விசுவாச உணர்வு கொண்ட பழைய மாணவர்களது பேராதரவுடன் தோற்றம் பெற்றது மட்டுமல்லாது குறுகிய ஏழு ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு இந்து அன்னையை செழுமைப்படுத்துவதில் இச்சங்கம் ஆற்றிய பங்கு வியக்கத்தக்கவகையில் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் அமையப்பெற்ற நிர்வாகங்கள் அனைத்தும் அர்ப்பணிப்போடும் கல்லூரி அன்னை மீதான விசுவாச உணர்வோடும் உழைத்து காரை இந்துவின் முக்கியமான தேவைகள் அனைத்திற்கும் நிரந்தரமாக உதவிகளைப் பெறக்கூடிய வகையிலான திட்டங்களை நிறைவு செய்தும் அல்லது நிறைவு செய்வதற்கு காரணமாகவிருந்தும் பெரும் வரலாற்றுப் பணியினை ஆற்றியுள்ளது. இச்சங்கத்தினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கல்லூரி சார்ந்த வளர்ச்சிப்; பணிகளும், அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பு விதிகளுக்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகரீதியான நேரிய செயற்பாடுகளும், எத்தகைய நிகழ்வானாலும் அவற்றினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடாத்தி வருகின்ற ஆளுமையும் அனைவரதும் பாராட்டினையும் நம்பிக்கையையும் பெற்று விளங்குவனவாகும்.
இவை அனைத்திற்கும் ஆதார தளமாக விளங்கி வருகின்ற இந்து அன்னையின் மைந்தர்களிற்கும், அநுசரணையாளர்களிற்கும், நலன் விரும்பிகளிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை சிரம் தாழ்த்திய நன்றியைத் தெரிவிப்பதுடன் தாங்கள் எமது சங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் நல்லெண்ணமும் வீண்போகாது காப்பாற்றிடவும் கல்லூரி அன்னையை உன்னதமான நிலைக்கு எடுத்துவரவும் தொடர்ந்து அயராது உழைக்கும் என இத்தருணத்தில் உறுதி கூறுகின்றோம் என பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் இலட்சியப் பயணத்தின் ஏழு ஆண்டுகள் நிறைவையொட்டி நிர்வாகம் வழங்கிய செய்தி.”