கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (10.02.2015) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக உறுப்பினருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி மற்றும் பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்களும், பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களும் பாடசாலையின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். ஸ்ரீலங்காக் கொடி, கல்லூரிக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னார் மண்டபத்தினுள் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் தொடங்கின.
ஆசிரியை திருமதி.சத்தியா தியோஜினஸ் வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மடத்துக்கரை அம்மன் கோயில் பிரதம குருக்கள் சிவத்திரு கு.சரவணபவானந்தசர்மா அவர்களின் ஆசியுரை வழங்கினார்.
அதிபர் தமது தலைமையுரையில், சாதனை மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டியதுடன் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்வி சிறப்புறவும் இம்மாணவர்கள் மேலும் சாதனைகளைப் படைத்து எமது கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்க்கவும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசாக ரூ 60,000 ரூபாவை தமது தந்தையார் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக வழங்கி உதவிய அவரது மகன் திரு.அரிகரன் அவர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
அடுத்து பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களின் ஆற்றுகைகளின் வரிசையில் செல்வி.பாலச்சந்திரன் வதனியின் மெல்லிசையும், செல்வி.கி.சிவநிறஞ்சனா, செல்வி.மு.சகிதா, செல்வி.நா.நாகசிந்துஜா ஆகியோரின் சிவநடனமும் இடம்பெற்றன.
வாழ்த்துரைகளை பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கோட்டக் கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் சார்பில் திரு.இ.ஜீவராஜ் அவர்களும் வழங்கினர்.
அடுத்து கௌரவ மாணவர்கள் ஆறு பேருக்கும் விருந்தினர்களால் அமரர் S.P.S நினைவாக பணப்பரிசாக தலா ரூ10,000 ரூபா வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் மாலை அணிவித்து கௌரவித்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.
அடுத்து கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் தமது ஏற்புரையை வழங்கினர்.
ஆசிரியை திருமதி.கலாநிதி சிவநேசனின் நன்றியுரையுடன் அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்ற இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
கதி இழந்தாலும் தமது பதி இழக்காமால் இன்றும் பிறந்த மண்ணில் வாழ்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் நுழையும் இம்மாணவச் செல்வங்களுக்கும் கல்வியோடு கலைகளையும் ஒழுக்கத்தையும் புகட்டிய ஆசிரிய மணிகளுக்கும் இம்மாணவர்களுக்கு மட்டுமல்ல எமது மண்ணுக்கும் ஆதாரமாக வாழ்ந்து வரும் பெற்றோருக்கும் இவ்வாறான மதிப்பளிப்பு நிகழ்வுகள் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதுடன் இம்மாணவர்களின் சாதனை வளர்ந்து வரும் இளைய மாணவ சமூகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்.
No Responses to “பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்”