காரை.அபிவிருத்திச் சபையும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்துகின்ற ‘முத்தமிழ் விழா’ நாளைமறுதினம் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரை.அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் தலைமையில் சிறப்புற நடைபெறவுள்ளது. இவ்விழாவில் காரை. மண்ணில் தற்போது வாழ்ந்துகொண்டுள்ள மூத்த கல்வியாளரான வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி வே.தர்மரட்ணம் அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்.
காரை.இந்து அன்னையின் பெருமைக்குரிய புதல்வனான கலாநிதி தர்மரட்ணம் அவர்கள் இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்து வருபவர். தலைசிறந்த கணிதவியலாளரும், கல்வி நிர்வாகியுமாகிய தர்மரட்ணம் அவர்கள் 43 ஆண்டுகால நீண்ட கல்விச் சேவையாற்றிய பெருமையைக் கொண்டவர். கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய இவர், யாழ் பல்கலைக்கழகத்தின் கணித, புள்ளிவிபரவியல்த் துறைத் தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும், யாழ் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்து எமது சமூகம் சிறந்த கல்விச் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு உழைத்தவர். காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனை கொண்டவராக விளங்கும் இவர் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தில் இடம்பெற்று தமது சேவையை வழங்கியது மட்டுமல்லாது உடல் தளர்வுற்றிருந்தபோதும் இன்றுவரைக்கும் கல்லூரிச் சமூகத்துடன் தொடர்பிலிருந்து தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருபவர்.
வாழ்நாள் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய கலாநிதி தர்மரட்ணம் அவர்கள் ‘முத்தமிழ் விழா’வில் கௌரவம் பெறுவது குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பெரு மகிழ்ச்சியடைவதுடன் இத்தருணத்தில் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் மிகுந்த பெருமிதம் கொள்கின்றது. அதேவேளை இவரைக் கௌரவிக்க முன்வந்த காரை. அபிவிருத்திச் சபையினருக்கும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினருக்கும் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
முத்தமிழ் விழாவின் அறிவித்தல் பிரசுரத்தை கீழே பார்வையிடலாம்:
No Responses to “‘முத்தமிழ் விழா’வில் கௌரவிக்கப்படவுள்ள காரை.மண்ணின் மூத்த கல்வியாளர், வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி தர்மரட்ணம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”