காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி நேற்றைய தினம் 31-01-2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் தீவக வலய கல்விப் பணிப்பாளர திரு.பி.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், காரைநகர் பிரதேசச் செயலக நிர்வாக அலுவலர் திரு.அன்ரன் ஜேசுதாஸ் சிறப்பு விருந்தினராகவும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு போட்டி நிகழ்வினை சிறப்பித்தனர். பெற்றோர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் என திரளானோர் சமூகமளித்திருந்தமை நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்ததுடன் போட்டியாளர்களிற்கு ஊக்குவிப்பாகவும் அமைந்திருந்தது.
வழமைபோன்று மாணவர்கள் நிகழ்த்திய கம்பீரமான அணிநடை, கண்ணைக் கவர்ந்த உடற்பயிற்சிக் கண்காட்சி, விறுவிறுப்பான தாம்பிழுவைப்போர் என்பன பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்கு சயம்பு, நடராசா, தியாகராசா, பாரதி ஆகிய நான்கு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு அவ்வில்லங்களுக்குரிய வர்ணங்களான முறையே பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு வர்ணங்களாலும்; அழகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில்; விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களினால் அனைவரும் பாராட்டும்படி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தை’ நிறுவி அதனூடாக கல்லூரியின் அபிவிருத்திக்கு பேருதவி புரிந்து வருகின்ற பழைய மாணவனும், கனடாவின பிரபல குழந்தைகள் மருத்துவ நிபணருமான வி.விஜயரத்தினம் அவர்களை கல்லூரிச் சமூகத்தின் சார்பில் தமது தலைமை உரையின்போது பாராட்டிய அதிபர் திரு. ஜெகதீஸ்வரன் இந்த நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் 2வது ஆண்டாக மெய்வல்லுநர் போட்டி நடைபெறுவதற்கு உதவிய மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
போட்டியின்போது எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி.”