காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவை அனைத்தும் இசை ரசிகர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றிருந்தன என்பது மட்டுமல்லாது பெரு வெற்றி நிகழ்வுகளாக அமையப்பெற்று அவற்றின் ஊடாக காரை.இந்துவின் வளர்ச்சிக்கு உதவுதல் என்கின்ற உயரிய இலக்கினையும் அடையமுடிந்தது. இந்நிகழ்வுகள் மூலமாத் திரட்டப்பட்டிருந்த நிதியே கல்லூரியின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிவைக்க உதவியது. சென்ற ஆண்டு நடாத்தப்பட்டிருந்த ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் இசை நிகழ்ச்சி மூலமாக இருபது இலட்சம் ரூபா திரட்டப்பட்டு கல்லூரியின் அவசியத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கான நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு உதவியிருந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை அற்புதமான கர்நாடக இசை நிகழ்வினை வழங்கும்பொருட்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அழைப்பிற்கிணங்க ‘சுப்பர் சிங்கர்’ ராஜகணபதி வருகைதரவுள்ளார். உலகப்புகழ்பெற்ற விஜே தொலைக்காட்சியின் ‘சுப்பர் சிங்கர்’ போட்டித் தொடர் 5இல் பங்குகொண்டவர்களுள் வயதில் மிகவும் இளையவரான ராஜகணபதி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவுசெய்யப்பட்டு மத்தியஸ்தர்களின் தெரிவாக வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டவர். கர்நாடக இசைப் பாடல்கள் சுற்றில் ராஜகணபதியின் கர்நாடக இசைத் திறமை கண்டு மத்தியஸ்தர்கள் வியந்து பாராட்டினர். தமது 5வது வயதிலேயே கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்க ஆரம்பித்தவர். இவருக்கு 12 வயது வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல சங்கீத சபாக்களிலும் ஐம்பதிற்கு மேற்பட்ட மூன்று மணிநேர இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி சாதனை படைத்தவர். 10வயதிலேயே இவரிடத்தில் காணப்பட்ட கர்நாடக சங்கீத அறிவும், கற்பனாசுரம் பாடும் ஆற்றலும் காரணமாக சங்கீத மேதைகள் பலரின் ஆசியையும் பாராட்டினையும் பெற்றுக்கொண்டவர்.
இன்று பல திரைப்படங்களுக்கும் பின்னணிப் பாடல்கள் பாடி இசை உலகிலும், திரை உலகிலும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றார்.
எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடபெறவிருக்கும் ராஜகணபதியின் கர்நாடக இசைக் கச்சேரியானது கனடாவில் நடைபெறும் இவரது முதலாவது கர்நாடக இசை நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக இசைப் பாடல்களுடன் திரைப்படங்களில் இடம்பெற்று ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் கர்நாடக இசைப்பாடல்களையும் கொண்டதாக ராஜகணபதியின் இசை நிகழ்வு அமைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியின் ஊடாகத் திரட்டப்படும் பணம் கல்லூரியின் அவசியத் தேவைகளிற்கு உதவ 20இலட்சம் ரூபா வங்கியின் வைப்பிலிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்புத் திட்டத்தின் வைப்புத் தொகையினை அதிகரிக்க உதவப்படும்.
ராஜகணபதியால் பாடப்பெற்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கர்நாடக இசைப் பாடல் ஒன்றின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “காரை.இந்துவின் மேம்பாட்டிற்கான நிதிசேர் நிகழ்வாக பின்னணிப் பாடகர் ‘சுப்பர் சிங்கர்’ ராஜகணபதியின் இன்னிசைக் கச்சேரி.”