தாம் சார்ந்த தமிழ் மக்களிற்கும், ஊரின் உறவுகளிற்கும் ஆற்றிய தன்னலமற்ற சேவையினால் அவர்கள் அனைவரதும் நெஞ்சங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றுக்கொண்டவரான திரு.சபாபதி சபாநாயகம் அவர்களின் மறைவானது அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது எமது தேசத்தின் மக்களிற்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாக அமைந்துவிட்டது.
சமூக உணர்வும், இன,மொழிப் பற்றும், கல்வி அறிவும், மிக்க குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்தவரான திரு.சபாநாயகம் அவர்கள் இடைநிலைக் கல்வியையும், உயர் கல்வியையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டவர். படவரைஞர் கற்கைநெறியினை மேற்கொண்டு அதிலே பட்டம் பெற்ற இவர் இலங்கை கட்டிடத் திணைக்களத்தில் படவரைஞராக(Draftsman) நியமனம் பெற்று பணியாற்றத் தொடங்கினார். இயல்பாகவே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கிய இவர் உயர் கல்வியை பெற விளைந்தவராக லண்டன் மாநகருக்குச் சென்று கட்டிட நிர்மாணத்துறையில் கல்வியை மேற்கொண்டு கட்டிடப் பொறியியலாளர் பட்டத்தினைப் (Civil Engineer)பெற்றுக்கொண்டவர். நைஜீரியா நாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும்; லண்டனிற்குச் சென்று Milton Keynes என்ற பிரதேசத்தில் தமது குடும்பத்துடன் குடியேறி வசித்துவரலானார். தமிழ் கல்விக் கழகம், தமிழ் பொது மன்றம், தமிழ் மூதாளர் கழகம், முருகன் ஆலய அறங்காவலர் சபை என பிரதேசத்திலுள்ள பல துறை சார்ந்த சேவை அமைப்புக்களில் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தது மட்டுமல்லாது பல அமைப்புக்களின் தோற்றத்திற்கும் மூலகாரணமாக விளங்கி அரும் பணியாற்றியவர். இவரது பணிகள் ஊடாக இப்பிரதேச மக்களுடைய அன்பையும், மதிப்பினையும் பெற்று விளங்கினார்.
ஈழத்தில் புற்றுநோயினால் அல்லலுறும் நோயாளர்களிற்கு உதவும் நோக்குடன் லண்டனில் சேவையாற்றி வருகின்ற Cancer Aid North/East, Srilanka என்ற அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான சபாநாயகம் அவர்கள் தெல்லிப்பளையில் அமைந்துள்ள புற்று நோயாளர் மருத்துவ மனையின் இரு மாடிக்கட்டிடத்தினை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பதுடன் இத்தகைய புற்று நோயாளர்கள் பயன்படுத்தக்கூடிய Ambulance வாகனத்தினை உதவியதிலும் பெரும் பங்காற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல முறை ஈழத்திற்கு பயணம் செய்து யுத்தத்தினாலும், சுனாமியினாலும் வீடுகளை இழந்த தமிழ் மக்கள் துரிதகதியில் வீடுகளை நிர்மாணிக்க தாம் பெற்ற நிபுணத்துவ அறிவினைப் பயன்படுத்தி உதவியவர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாட்டிற்கு பெரும் பங்களித்து வருகின்ற பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினை தோற்றுவித்து அதன் வளர்ச்சியில் பங்குகொண்டவர்களுள் திரு.சபாநாயகமும் ஒருவர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது தந்தையாரான அமரர் சபாபதி, சகோதரர்களான அமரர் சபாநடேசன், அமரர் கலாநிதி சபாரத்தினம் ஆகியோரின் வழியில் தமிழ்ப் பணியிலும், பொதுப் பணியிலும, மனிதநேயப் பணியிலும், ஊர்ப் பணியிலும் தீவிர ஈடுபாடுகொண்டு செயலாற்றி வந்த சபாநாயகம் அவர்களின் விளம்பரம் தேடாத தன்னலமற்ற சேவையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டுவதுடன் அன்னார் காரை இந்துவின் மகிமை மிக்க மைந்தன் என்ற வகையில் அன்னாரது உன்னதமான சேவையால் மிகுந்த பெருமையடைகிறது. அன்னாரது வரலாற்றுப் பணிகளினால் காரை.இந்துவின் புகழ் மேலோங்கப்பெற்றுள்ளது.
அன்னாரது இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவிக்கின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
No Responses to “காரை.இந்து அன்னைக்கு புகழ் சேர்த்த சபாபதி சபாநாயகம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி!”