காரைநகர் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவினை கொண்டாடி மகிழ அன்னையின் மைந்தர்கள் தயாராகி வந்த தருணமாகிய கல்லூரி வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில், கனடாவில் வதியும் அன்னையின் மைந்தர்களின் ஒருங்கிணைந்த உழைப்பினால் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 01ஆம் திகதி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தோற்றம் பெற்றமை அறிந்து தரணியெங்கும் வாழும் மைந்தர்கள் குதூகலித்து மகிழ்ந்தனர். இச்சங்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், பாரெங்கும் அன்னையின் புகழ் பரப்பவும், புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்து அன்னையின் மைந்தர்களை ஒருங்கிணைக்கவும் தொடங்கப் பெற்ற karaihinducanada.com என்ற இணையத்தளம் தனது வெற்றிகரமான சேவையில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மட்டற்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகின்றது.
இவ்வாறு karaihinducanada.com இணையத்தளம் தொடங்கப்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2013ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில்; நடைபெற்ற நிகழ்வின்போது பழைய மாணவர் சங்கத்தை உருவாக்க உழைத்தவர்களான சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவர் அமரர் சி.தம்பிராசா, சங்கத்தின் முன்னாள் போசகரும், முன்னாள் தலைவருமான திரு.மு.வேலாயுதபிள்ளை ஆகியோர் இணைந்து karaihinducanada.com இணையத்தளத்தினை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்ததன் மூலம் வரலாற்றுப் பயணம் ஒன்று ஆரம்பமானது.
சங்கத்தை உருவாக்க உழைத்த மற்றொருவரான திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் இவ் இணையத்தளத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் தனிப்பட்ட காரணங்களினால் அப்பதவியிலிருந்து நீங்கும் வரையுள்ள ஆறு ஆண்டுகளிலும், ஊடக விதிமுறைகளிற்கு ஏற்பவும், பிரசுரிக்கப்படுபவை தொடர்பில் சங்கத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளிற்கு ஏற்பவும் ஆற்றியிருந்த சிறப்பான சேவையானது குறுகிய காலத்தில் இவ்விணையத்தளம் அனைவரதும் பாராட்டினைப் பெற்று துரித வளர்ச்சியைப் பெற உதவியது மட்டுமல்லாது சங்கத்தினதும் கல்லூரியினதும் வளர்ச்சியில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதனின் அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய சேவையைப் பாராட்டுவதுடன் உளமார்ந்த நன்றியையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவித்துக்கொள்கின்றது.
இவ்விணையத்தளத்தின் தோற்றத்திற்கு உறுதுணையாகவும் ஊக்குவிப்பாகவும் இருந்து செயற்பட்ட தாய்ச் சங்கத்தின் முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களிற்கும், பாடசாலை சார்ந்த செய்திகளையும், சாதனைகளையும் அனுப்பிவைத்து ஒத்துழைத்த முன்னாள் அதிபர்களான திருமதி வாசுகி தவபாலன், முன்னாள் பதில் அதிபர் அமரர் கலாநிதி சிவநேசன், திருமதி சிவந்தினி வாகீசன் ஆகியோருக்கும் இவ்விடயத்தில் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்ற தற்போதய அதிபரான திரு.அ.ஜெகதீஸ்வரன் மற்றும் பழைய மாணவர் சங்க தாய்ச் சங்க உறுப்பினர்களிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய நீங்கள் வழங்கி வருகின்ற மகத்தான ஆதரவே எமக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளமை குறித்து தங்கள் அனைவருக்கும் தலை சாய்த்து நன்றி கூறுகின்றோம்.
வாசகர்களாகிய உங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் வரைக்கும் இந்து அன்னையின் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியில் தளராது தொடர்ந்து ஈடுபட பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உறுதி பூண்டுள்ளது.
இணையத்தளசேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்டிருந்த சில காட்சிகள்:
No Responses to “காரை.இந்து அன்னையின் புகழை பாரெங்கும் பரப்பி வரும் karaihinducanada.com இணையத்தள சேவைக்கு அகவை ஏழு!”