காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தொடக்ககால உறுப்பினரான திருமதி(அமரர்) மனோரஞ்சனா கனகசபாபதி அவர்கள் ரொறன்ரோவை உலுக்கிய வாகன விபத்தொன்றில் 2013ஆம் ஆண்டு உயிரிழந்தவர். இவரது பெயரில் அன்னாரது குடும்பத்தினால் நிறுவப்பட்டதே ‘மனோரஞ்சனா ஞாபகார்த்த நிதியம்‘ ஆகும். இந்நிதியத்தின் அனுசரணையில் காரைநகர் வட-கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஜந்து வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களைக் கொண்ட நூறு குடும்பங்களிற்கு கொரோனா நிவாரணமாக சத்துணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மனோரஞ்சனாவின் கணவரான திரு.மா.கனகசபாபதி அவர்களினால் விநியோகம் செய்யப்பட்டிருந்த சத்துணவுப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியுடையவையாகும். திரு.மா.கனகசபாபதி அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் பயிலும் வாழ்வாதார வசதி குறைந்த மாணவர்களிற்கு கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகள் மனோரஞ்சனா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்ததுடன் தொடர்ந்தும் இவ் உதவித் திட்டம் பாடசாலையின் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று இக்கல்லூரியில் அனுமதியைப் பெற்றுள்ள ஐந்து மாணவர்களிற்கு மாதம் தோறும் குறிப்பிட்ட நிதியத்தின் அனுசரணையில் திரு.கனகசபாபதி அவர்களினால் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இக்கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட காலணிகள் அற்ற மாணவர்களிற்கு இந்நிதியத்தின் அனுசரணையில் காலணிகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற மாணவி ஒருவருக்கும் பட்டப் படிப்பினை முடிக்கும் வரைக்குமான உதவி மனோரஞ்சனா ஞாபகார்த்த நிதியம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
No Responses to “மனோரஞ்சனா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரை. வட-கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிறுவர்களிற்கு கொரோனா நிவாரணமாக சத்துணவுப் பொதிகள் விநியோகம்!”