ஈழத்திலே புகழ்பெற்ற சிறந்த கல்விமான்கள் அதிபர்களாகக் கடமையாற்றிய பெருமையைக் கொண்டு விளங்குவது காரைநகர் இந்துக் கல்லூரியாகும். இவ்விதம் காரை. இந்துவின் அதிபர் பதவியை அலங்கரித்த பலரும் சாதனையாளர்களாக மிளிர்ந்து கல்வி உலகின் போற்றுதலுக்குரியவர்களாக விளங்குகின்றனர். அத்தகையோர் வரிசையில் தமிழுலகு நன்கு அறிந்த புகழ்பூத்த கவிஞரான கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளையும் ஒருவராக இருந்து காரை.இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்தவராக விளங்குகின்றார். 1978ஆம் ஆண்டு ஆசிரியராக இணைந்து கொண்ட சுந்தரம்பிள்ளை அவர்கள் 1981இல் அதிபராக வரும்வரைக்கும் உப அதிபராக சிறப்பாக பணியாற்றியிருந்தவர். தமிழ், இந்துநாகரிகம், நாடகமும் அரங்கியல் ஆகிய பாடங்களை சிறப்பாக கற்பித்தவர்.1981ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆண்டின் இறுதி வரையுள்ள ஓர் ஆண்டு என்கின்ற குறுகிய காலத்திற்கு அதிபராக பணியாற்றியிருந்தபோதிலும் தனது முத்திரையைப் பதித்தவர். மாணவர்களின் ஒழுக்கம் மேம்படவும் கல்லூரியின் நிர்வாகம் சிறப்புறவும் ஆளுமையுடன் செயலாற்றியவர். தமிழ், ஆங்கிலம், பாளி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் பல கவிதை நூல்களையும் ஆய்வுநூல்களையும் எழுதி பல தடவைகள் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். காரைநகரில் பிறந்த இவர் பிறந்த மண்ணின் மீது பற்றுக்கொண்டவராக தனது பெயரின் முன்னே பிறந்த மண்ணின் பெயரையும் பதித்துக்கொண்டு காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். பதவியுயர்வு பெற்றுச் சென்று தலவாக்கலை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலைகளில் அதிபராகப் பணியாற்றியவர். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகுதிநேர விரிவுரையாளராகப் கடமையாற்றியுள்ளார். இனப் பற்றும் தமிழ்ப் பற்றும் நிறைந்த இவர் லண்டனுக்கு புலம்பெயர்ந்து சென்று தனது தமிழ்ப் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வந்த வேளையில் 2005ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமது 67வது வயதில் அமரத்துவம் அடைந்தார்.;
கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை அமரத்துவம் அடைந்த 15வது ஆண்டு நினைவு கூரப்படும் வேளையில் அன்னார் காரை.இந்துவிற்கு ஆற்றிய சேவையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் நன்றியோடு நினைவுகூருகின்றது.
சுந்தரம்பிள்ளை அவர்கள் மறைந்த 15வது ஆண்டு நினைவு தினமாகிய செப்ரெம்பர் 21 இல் அன்னார் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அன்னாரது ஆக்கங்கள, புகைப்படங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு பயன்படக்கூடிய பல விடயங்களையும் உள்ளடக்கியதாக karaikavi.com என்கின்ற இணையத்தளம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமரர் காரை.சுந்தரம்பிள்ளை அவர்கள் காரை.இந்துவில் பணியாற்றிய காலத்தின் நினைவுப் பதிவுகள் சில, புகைப்படங்களாக கீழே இணைக்கப்பட்டுள்ளன. இப்புகைப்படங்கள் அனைத்தும் karaikavi.com இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்.
நன்றி: karaikavi.comஇராப்போசன விருந்து – 1981இராப்போசன விருந்து – 1980இராப்போசன விருந்து – 1981இராப்போசன விருந்து – 1981இராப்போசன விருந்து – 1979இராப்போசன விருந்து – 1979இராப்போசன விருந்து – 1979பரிசில் தின உரை – 1981
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் அதிபர் கலாநிதி காரை.சுந்தரம்பிள்ளை அவர்கள் மறைந்த 15வது ஆண்டில் அன்னாரது சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றுது.”