காரைநகர் இந்துக் கல்லூரியில் 1940ஆம் ஆண்டில் கல்வியை கற்றுக்கொண்ட பொன்னாவளை, களபூமி, காரைநகரைச் சேர்ந்த கந்தையா நடராசா அவர்கள் மேற்கொண்டு வருகின்ற பழமையையும் பாரம்பரியத்தினையும் பேணிப் பாதுகாத்து வருகின்ற அரும் பணியானது பல்வேறு ஊடகங்களினாலும் அமைப்புக்களினாலும் பாராட்டி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 90வயதினை எட்டியிருந்தபோதும் மிகுந்த துடிப்போடு தமது பாரம்பரியத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது பரம்பரைபரம்பரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தொழில்சார் பொருட்களையும், அன்றாடப் பாவனையிலிருந்து கழிக்கப்பட்ட பழைய பொருட்களையும் சேகரித்து பாதுகாத்து வைப்பதிலும் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றார். இவருடைய இந்தச் செயற்பாட்டினை பாராட்டி காரைநகர் கலாசார பேரவை ‘கலைஞானச்சுடர்’ என்ற விருது வழங்கி கௌரவித்திருப்பதுடன் வட-மாகாண முதலமைச்சர் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் ஆகியோரினதும் கௌரவத்தினையும் பெற்றுள்ளார்.
திரு.நடராசா அவர்களின் முன்னுதாரணமான பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துவதுடன் இந்து அன்னையின் புதல்வன் என்ற வகையில் மிகுந்த பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றது.
IBC தமிழ் தொலைக்காட்சி ‘கால வழு’ என்கின்ற தனது நிகழ்ச்சி ஊடாக கந்தப்பு நடராசா அவர்களின் பணி குறித்த காணொளிப் பதிவொன்றினை வெளியிட்டு ஒளிபரப்பியுள்ளது. இக்காணொளியினை அவரது வதிவிடத்தில் வைத்துப் பதிவு செய்தவர் திரு.நடராசாவிடம் அவதானித்தவற்றை குறிப்பிட்டுத் தெரிவிக்கின்ற கருத்துக்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு:
காரை.இந்துவில் ஆங்கில மொழி மூலம் கல்வியை மேற்கொண்டிருப்பினும் இவரிடத்தில் கர்வம் எள்ளளவும் இல்லை.
பழைய பொருட்களை சேகரித்து பாதுகாத்து வருவதன் ஊடாக ஆவணப்படுத்தல் எனும் அரும் பணியினை செய்து வருகின்றார்.
90 வயதை அடைந்துள்ளபோதும் துடிப்போடு நிமிர்ந்து நிற்கின்றார்.
பழைய பாரம்பரியப் பொருட்களிற்கு இவர் அளிக்கின்ற விளக்கங்கள் மெய் சிலிர்க்க வைப்பதாகவுள்ளது.
நாகரீகம் என்ற பெயரில் பழமை மறக்கப்பட்டு பாரம்பரியப் பொருட்கள் பாவனையில் இல்லை என்பது இவரது ஆதங்கம்.
தாழாத தன்னம்பிக்கையும், மாளாத இறை நம்பிக்கையும் இவர் இந்த வயதிலும் நிமிர்ந்து நிற்பதற்கு காரணங்களாகவுள்ளன.
தாம் சேகரித்து வைத்துள்ள அரிய பழைய பொருட்களை பேணிப் பாதுகாப்பாக வைப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் ஏற்ற பாதுகாப்பான இடம் ஒன்றினை தந்து உதவ வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவினை பார்வையிடுவதன் மூலம் திரு.நடராசாவின் பணி குறித்த முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
No Responses to “காரை.இந்துவின் மூத்த பழைய மாணவன் கந்தப்பு நடராசா அவர்களின் முன்னுதாரணமான அரும்பணி.”